வெளியிடப்பட்ட நேரம்: 09:45 (15/10/2017)

கடைசி தொடர்பு:16:18 (12/07/2018)

வீட்டுக்கு ஒரு நூலகம் அமைக்க சொன்ன விஞ்ஞானி டாக்டர் அப்துல்கலாம் பிறந்தநாள் இன்று

உலக வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவையும் உருவாக்கிய இணையற்ற விஞ்ஞான சிற்பி டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாமின் 86-வது பிறந்த தினம் இன்று.

அன்னைக்கு பாச பிள்ளையாய், பள்ளிக்கு பெருமைமிகு மாணவனாய், பணியில் நல்ல ஊழியனாய், பதவியில் எளிய மனிதனாய் வாழ்ந்து காட்டியது மட்டுமில்லாமல், தான் வகித்த பதவியால் அந்த பதவியையே பெருமை பட வைத்தவர், மாமனிதர் டாக்டர் அப்துல்கலாம். 
 கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தான் பிறந்த மண்ணான ராமேஸ்வரத்தில் நடந்த 'கல்வி ஒளி விழா'-வில் பங்கேற்ற டாக்டர் கலாம் அங்கு கூடியிருந்த மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய போது நல்ல மாணவர்களை, மனிதர்களை உருவாக்குவதில் நூலகங்களின் பங்களிப்பு குறித்தும், வீட்டு நூலகங்களை வலியுறுத்தும் விதமாக ஒவ்வொரு வீடும் ஒரு நூலகமாக மாற வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் வகையில்

வீட்டுக்கு ஒரு நூலகம் அமைக்க சொன்ன அப்துல்கலாம்

''ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறைகளுக்கு அருகில் நூலகங்களை மாணவர்கள் அமைக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் ஒரு நாளின் ஒரு மணி நேரமாவது அதை பயன்படுத்த செய்ய வேண்டும். இது அறிவு புரட்சிக்கு வித்திடும். படிக்கும் காலத்தில் மாணவர்கள் ஐந்து விஷயங்களை மனதில் நிறுத்த வேண்டும். உயர்வான லட்சியம், கசடற கற்பது, கடின உழைப்பு, அச்சமின்மை, ஒழுக்கம். 
கிராமப்பகுதிகளுக்கும், நகர்புறங்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் அகற்றப்படுவதே விஷன் 2020 நோக்கம். இதனை அடைய செயலூக்கமுள்ள தலைவர்கள் பாடுபட வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீர்,கல்வி, ஒருங்கிணைந்த சுகாதாரத் திட்டம், தகவல் தொழில்நுட்பம், வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றுவதன் மூலம் கிராமங்களை முன்னேற்றலாம். குடும்பங்களில் ஒழுக்கம் இருந்தால்தான் நாடு முன்னேற்றமடையும்''  என கூறி சென்றார்.

 அவர் எடுத்து சொன்ன நல்ல செயல்களை முழுமையாக கடைபிடிக்க அவரது பிறந்த தினமான இன்று நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.