“தற்கொலை செய்துகொண்டார் என்பதுதான் உண்மை!” - ஸ்ரீதர் வழக்கறிஞர் #VikatanExclusive | He commited suicide, that is the truth, says Sridhar's lawyer

வெளியிடப்பட்ட நேரம்: 10:26 (15/10/2017)

கடைசி தொடர்பு:15:52 (16/10/2017)

“தற்கொலை செய்துகொண்டார் என்பதுதான் உண்மை!” - ஸ்ரீதர் வழக்கறிஞர் #VikatanExclusive

ஸ்ரீதர்

ஸ்ரீதர், இறந்து 10 நாள்களுக்குமேல் ஆகிவிட்ட நிலையில், அவரைப் பற்றிய பல்வேறு வகையான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மையான தகவல்கள் என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றன. இந்த நிலையில், ஸ்ரீதர் உடலை இந்தியா கொண்டுவர, கம்போடியா சென்றிருக்கிறார் அவரின் வழக்கறிஞர் மலையூர் புருஷோத்தமன். கம்போடியாவில் இருக்கும் அவரிடம் பேசினோம்...

“ஸ்ரீதர் இறந்துவிட்டார் என்பதை எப்படி உறுதிசெய்தீர்கள்?''

“கடந்த 4-ம் தேதி ஸ்ரீதர் இறந்துவிட்டார் என்ற தகவல், அவரின் சமையல்காரர் தேவேந்திரன் மூலம் எனக்குக் கிடைத்தது. உடனே நான், என் ஜூனியர் விஷ்ணு மற்றும் ஸ்ரீதர் மகள் தனலட்சுமி ஆகியோர் கம்போடியா வந்தோம். கம்போடியா வந்ததும் ஸ்ரீதர் தங்கியிருந்த இடம், மருத்துவமனை உள்ளிட்டவற்றைப் பார்த்தோம். பிறகு அவரின் உடலைப் பார்த்தோம். அங்க அடையாளங்களை வைத்து உறுதிப்படுத்தினார் அவர் மகள் தனலட்சுமி. அதன் பிறகே 6-ம் தேதி மருத்துவச் சான்றிதழ் பெற்றோம். இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான் அவர் என்னிடம் பேசினார். அப்போது ‘எனக்கு இங்கே இருக்க பிடிக்கவில்லை. நான் உயிரிழந்தால், எனது உடலை இந்தியா கொண்டுவர என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கேட்டிருந்தார். ‘தேவையில்லாமல், இப்போது ஏன் அதைப்பற்றிப் பேசுறீங்க? உங்களுக்கு ஒன்றும் ஆகாது'' என்றேன். இறப்பதற்கு முன்பு அவர் மகன் சந்தோஷ்குமாரிடமும் பேசியிருக்கிறார். ஆனால், 'தான் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக' சந்தோஷ்குமாரிடமும் சொல்லவில்லை. அடுத்த 10 நிமிடங்களில் தற்கொலை செய்துகொண்டதாக எனக்குத் தேவேந்திரனிடமிருந்து தகவல் வந்தது. மனஅழுத்தத்தோடு அவர் எங்களிடம் பேசியதால், 'அவர் தற்கொலை செய்துகொண்டார்' என்பதை நம்புகிறோம்.

''ஆனால், மாரடைப்பு என நீதிமன்றத்தில் இறப்புச் சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கிறதே?''

''ஸ்ரீதர் தற்கொலை செய்துகொண்டார் என்பது 100 சதவிகிதம் உண்மை. இந்தியாவில், தனியார் மருத்துவமனையில் தற்கொலை இறந்த நிலையில ஸ்ரீதர்செய்து கொண்டால், தற்கொலை எனச் சான்றளிப்பது கிடையாது. வேறு காரணங்களைக் காட்டித்தான் சான்றிதழ் கொடுக்கிறார்கள். அவர் விஷம் அருந்தியது தெரிந்ததும், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். அப்போது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கு முன்பே இறந்துவிட்டதால், 'கார்டியாக் அரஸ்ட்' என்று அந்த மருத்துவமனையில் சான்று கொடுத்திருக்கிறார்கள். பிற்காலத்தில், அவர் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்ய நேரிட்டால், அவர் தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் தெரியவரும். இதனால், தேவையில்லாமல் மேலும் சிக்கல் உருவாகக்கூடும். அதனால் நான் உண்மையை மறைக்க விரும்பவில்லை. அவரது உடல் கெடாமல் இருப்பதற்காக எம்ஃபார்மிங் செய்துள்ளோம். ஒரு மாதம் வரை உடல் கெடாது என மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.''

''தற்கொலைக்குக் காரணம் என்ன?''

''ஸ்ரீதர் திடமானவர். இந்தியாவில் உள்ள சொத்துகளை முடக்குவதால் அவர் சோர்ந்து விடமாட்டார். அவரது குடும்பத்திலும் பிரச்னைகள் இல்லை. வாழ்வதற்குத் தேவையான பணமும், அவரிடம் இருக்கிறது. அவரது குடும்பத்தில் யாராவது ஒருவர் மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவர் நினைத்ததுபோல அவரது இளைய மகள் தற்போது மருத்துவப் படிப்புக்காக முதலாம் ஆண்டு சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்தநிலையில்தான் ஸ்ரீதர் தற்கொலை செய்துகொண்டார். எனவே, தற்கொலைக்கான காரணம் என்னவென்று இன்னும் சரியாகத் தெரியவில்லை.''

''துபாயில் இருந்த ஸ்ரீதர், கம்போடியாவுக்கு ஏன் சென்றார்?''

''துபாயில் தங்கியிருந்த ஸ்ரீதர், பின்பு இலங்கை வந்தார். இலங்கையிலிருந்து வியட்நாம், அங்கிருந்து கம்போடியா வந்திருக்கிறார். கம்போடியா வந்த ஸ்ரீதர், இங்குள்ள டிகோஸ் அப்பார்ட்மென்டில் 35-வது மாடியில் தங்கியிருந்தார். அவருடன் சமையல்காரர் தேவேந்திரன் மட்டும் தங்கியிருந்தார். கடந்த ஒரு வருடமாகவே ஸ்ரீதர் இங்குதான் தங்கியிருக்கிறார். கம்போடியா அல்லது வியட்நாமில் நிலம் வாங்கி விவசாயம் செய்ய வேண்டும் என நினைத்தார். ஆனால், அவர் இங்கு நிலம் வாங்குவதற்கான சூழல் அமையவில்லை. இன்னும் ஒரு வருடம் கம்போடியாவில், ஸ்ரீதர் வசிப்பதற்கான விசாவும் அவரிடம் இருந்திருக்கிறது.'' 

''ஸ்ரீதர் உடலை இந்தியா கொண்டுவருவதில் உள்ள சிக்கல்கள் என்னென்ன?''

''இலங்கை பாஸ்போர்ட்டில் அவர் கம்போடியா வந்திருப்பதால், உடலை இந்தியா கொண்டுவருவதில் சிக்கல் இருந்தது. 'ஸ்ரீதர் உடலை இலங்கைக்குத்தான் அனுப்புவோம்' என்று இங்குள்ள கம்போடியா அதிகாரிகள் சொன்னார்கள். இலங்கை தூதரகம் கம்போடியாவில் இல்லை. இலங்கை தூதரகத்தைத் தொடர்புகொள்ள வேண்டுமென்றால், தாய்லாந்திலுள்ள இலங்கை தூதரகத்தைத்தான் தொடர்பு கொள்ள வேண்டும். இதனால், இலங்கையில் இருக்கும் எனது நண்பருக்கு போன் செய்து விசாரித்தேன். அவர் இலங்கை மூலம் கம்போடியாவில் ஸ்ரீதர் தங்கி இருந்த இடம்விசாரணை மேற்கொண்டால், பாஸ்போர்ட்டில் உள்ள முகவரி மற்றும் சான்றுகளைச் சரிபார்க்க நேரிடும். இதெல்லாம் முடிய இரண்டு மாதம்கூட ஆகலாம் என்றார். அதனால் நாங்கள் கம்போடியாவில் இருக்கும் இந்தியத் தூதரகம் மூலமே முயற்சி செய்தோம். தமிழகத்திலுள்ள மாயவரம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் தூதரகத்தில் வேலை செய்கிறார். இந்தியாவில் அனுமதி கொடுப்பதற்கு முதல்நாளே, எங்களுக்கு இந்தியத் தூதரகத்திலிருந்து அனுமதி வாங்கிக் கொடுத்தார் கண்ணன். எங்களுக்குத் தேவையான சான்றிதழ்களை,  நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிக விரைவாக வாங்கிக் கொடுத்தார். தற்போது 90 விழுக்காடு பணிகள் முடிவடைந்துவிட்டன. ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கட்கிழமை ஸ்ரீதர் உடலை இந்தியா கொண்டுவந்துவிடுவோம்.''

''மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லையே?''

''ஸ்ரீதர் இறந்துவிட்டார் என்ற தகவலை காஞ்சிபுரம் மாவட்டக் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானிக்கு உடனடியாகத் தெரிவித்தேன். ‘அவர் இறக்கவே இல்லை. இது தவறான தகவல்’ என்றார் எஸ்.பி. இதனால், கம்போடியாவில் கொடுத்த சான்றிதழ்களுடன் ஶ்ரீதரின் மகளை இந்தியாவுக்கு அனுப்பினோம். அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், எஸ்.பி அலுவலகத்திலும் மனுகொடுத்தோம். அவர்கள் நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என்பதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுத்தாக்கல் செய்தோம். ஸ்ரீதர் இறப்புச் சான்றிதழ் மற்றும் இந்தியத் தூதரகம் வழங்கிய தடையில்லா சான்றையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தோம். கம்போடியாவிலுள்ள இந்தியத் தூதரகம் செய்த உதவியால், ஸ்ரீதர் உடல் இந்தியா கொண்டுவரப்படவுள்ளது.''

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்