மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அன்னம்பாரிபட்டியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் கௌதம். பொறியாளரான இவர் இந்தியாவைச் சேர்ந்த எமாரல்டு ஸ்டார் என்ற சரக்கு கப்பலில் பணியாற்றுகிறார்.
பிலிப்பைன்சிலிருந்து பசிபிக் கடலில் சென்றுகொண்டிருந்தபோது சூறாவளியில் சிக்கி கப்பல் கவிழ்ந்தது. அதில் பயணித்த 26 மாலுமிகளுடன் கப்பல் கடலில் மூழ்கிய நிலையில் 16 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இன்னும் பத்து பேரை தேடி வருவதாக கூறப்படுகிறது, இந்நிலையில், இந்த பத்து பேரில் ஒருவர்தான் உசிலம்பட்டியைச் சேர்ந்த பொறியாளர் கௌதம் ஆகும்.
இந்தக் கப்பல் கம்பெனியில் பணியில் சேர்ந்து ஆறு மாதம்தான் ஆகியுள்ள நிலையில் கடந்த 13-ம் தேதி கப்பல் நிறுவனத்தின் அலுவலகத்திலிருந்து கௌதம் கப்பலில் சிக்கியுள்ள தகவலைக் கூறியுள்ளனர்.
எப்படியாவது தங்கள் மகனை உயிருடன் மீட்டுத்தரும்படி தமிழக அரசிடமும் இந்தியத் தூதரகத்திடமும் கோரிக்கைவைத்துள்ளனர் பெற்றோர்கள். ஹாங்காங்கைச் சேர்ந்த மீட்புக்குழுவினர் மீட்புப் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறார்கள். கௌதம் மீட்கப்பட வேண்டுமென்பதே அனைவரின் விருப்பம்.