'டெங்குவின் பாதிப்பு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகம்' - மத்தியக் குழுவினர் புதுச்சேரியில் தகவல்

”புதுச்சேரியில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு டெங்குக் காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்துள்ளது” என்று தேசிய தொற்று நோய் தடுப்பு திட்டத்தின் இணை இயக்குநரான கல்பனா பர்வா தெரிவித்துள்ளார்.

டெங்கு

டெங்குக் காய்ச்சல் பாதிப்பு குறித்து கடந்த இரண்டு நாள்களாக தமிழகத்தில் ஆய்வுசெய்த மத்தியக் குழுவினர் இன்று புதுச்சேரிக்கு வந்தனர். தேசிய தொற்றுநோய் தடுப்பு திட்டத்தின் இணை இயக்குநரான கல்பனா பர்வா தலைமையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பொது மருத்துவத்துறை பேராசிரியர் அசுதோஷ் பிஸ்வாஸ், தமிழ்நாடு குடும்பம் மற்றும் நலவழித்துறையின் மண்டல இயக்குநர் ரோஷினி உள்ளிட்ட 6 பேர் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர். புதுச்சேரி தலைமை செயலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர்கள் நமச்சிவாயம், சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், சுற்றுலாத்துறை அமைச்சர் ஷாஜகான் மற்றும் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை அதிகாரிகள் மற்றும் ஜிப்மர் மருத்துவமனை அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளின் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டது அந்தக் குழு. அப்போது புதுச்சேரியில் டெங்கு பாதிப்பு குறித்தும், அதற்காக எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் குறித்தும் கேட்டறிந்தனர்.

ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு மத்தியக் குழுவில் ஒருவரும், தேசிய தொற்று நோய் தடுப்பு திட்டத்தின் இணை இயக்குநருமான கல்பனா பர்வா, “புதுச்சேரியில் கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு டெங்குக் காய்ச்சலின்  பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டெங்குவைக் கட்டுப்படுத்த புதுச்சேரி அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதையடுத்து மருத்துவமனைகளுக்குச் சென்று டெங்கு பாதித்த நோயாளிகளிடம் பேசினோம். அதன்பின்னர் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு டெல்லி சென்று மத்திய அரசு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் எங்கள் அறிக்கையை சமர்ப்பிக்க இருக்கிறோம். அதன்பிறகு தேவைக்கேற்ப புதுச்சேரி அரசுக்கு மத்திய அரசு உதவி செய்யும் என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!