வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (15/10/2017)

கடைசி தொடர்பு:09:40 (16/10/2017)

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஓவியப்பயிற்சி! பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு

நெல்லை மாவட்ட அரசு அருங்காட்சியகத்தின் வெள்ளிவிழாவைக் கொண்டாடும் வகையில் ஒருநாள் சிறப்பு ஓவியப் பயிற்சி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

ஓவியப் பயிற்சி

நெல்லை மாவட்ட அரசு அருங்காட்சியகம் பாளையங்கோட்டையில் செயல்பட்டு வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டும் அல்லாமல் ஆய்வு மாணவர்களும் பயன் அடையும் வகையில் இந்த அருங்காட்சியகத்தில் பழங்காலப் பொருள்கள் ஏராளமாக உள்ளன. பழங்கால நாணயங்கள், சிற்பங்கள், பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய அத்தியாவசியப் பொருள்கள், ஆயுதங்கள், முதுமக்கள் தாழி என பல்வேறு பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவை குறித்த தகவல்களும் எழுதி வைக்கப்பட்டு இருப்பதால் ஏராளமானோர் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.

நெல்லை அருங்காட்சியகம் கடந்த 1998-ம் வருடம் தொடங்கப்பட்டது. தமிழகத்தின் 12-வது மாவட்ட அருங்காட்சியகமாக உருவான இந்த அருங்காட்சியகம் இந்த ஆண்டு வெள்ளிவிழா கொண்டாட உள்ளது. இதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையிலும் அருங்காட்சியகம் பற்றி மாணவர்கள், பொதுமக்கள் அறிந்துகொள்ளவும் இன்று ஒருநாள் சிறப்பு ஓவியப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

மாவட்ட அருங்காட்சியக  காப்பாளரான சத்தியவள்ளி தலைமையில் நடந்த இந்தப் பயிற்சியில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு ஓவிய ஆசிரியர்களான கணேசன், ஜமால், சொக்கலிங்கம், பழனிசெல்வம், செல்லம்மாள் உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர். பயிற்சிக்கு இடையே செய்முறைப் பயிற்சியாக, அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள பழங்கால கற்சிலைகளை நேரடியாகப் பார்த்து வரைவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நிறைவாக இந்த முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.