அ.தி.மு.க.வில் இருப்பவை அணிகளல்ல; மக்களைப் பிடித்த பிணிகள் - சீறும் வேல்முருகன்! | Tamizhaga Vazhvurimai Katchi leader Velmurugan slams ADMK factions

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (15/10/2017)

கடைசி தொடர்பு:09:34 (16/10/2017)

அ.தி.மு.க.வில் இருப்பவை அணிகளல்ல; மக்களைப் பிடித்த பிணிகள் - சீறும் வேல்முருகன்!

"ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அ.தி.மு.க.-வுக்குத் தேர்தல் ஆணையம் தண்டனை கொடுத்தால்தான், அத்தொகுதியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி போட்டியிடும்" என்று அக்கட்சியின் நிறுவனர் வேல்முருகன் கூறியுள்ளார்.

வேல்முருகன்

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் இன்று நெய்வேலியில் நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தலைவர் வேல்முருகன், "இப்போது தமிழகத்தில் நடப்பது அ.தி.மு.க அம்மா அணியின் ஆட்சியா, தினகரன் அணியின் ஆட்சியா, தீபா அணியின் ஆட்சியா, எடப்பாடி அணியின் ஆட்சியா என்று தமிழக மக்களுக்கு ஆளுநர் தெளிவுபடுத்தவேண்டும். அ.தி.மு.க-வில் இருப்பவை அணிகள் அல்ல. அவர்கள் தமிழக மக்களைப் பிடித்த பிணிகள். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்ற பெயரில் நூற்றுக்கணக்கான கோடி பணத்தை ஆட்சியாளர்கள் வீணடித்து வருகிறார்கள். டெங்குக் காய்ச்சல் குறித்து ஆய்வுசெய்யவந்த மத்தியக் குழு வெறும் சம்பிரதாயத்துக்கு மட்டுமே ஒரு சில மாவட்டங்களை ஆய்வுசெய்துவிட்டு போய்விட்டார்கள். இந்நோய்க்கு பச்சிளங்குழந்தை, முதியவர்கள் என்று பலர் இறந்துபோயுள்ளனர். இதைதெரிந்தும் அமைச்சர்கள் பிதற்றுவது வேடிக்கையாக உள்ளது. அதை ஆட்சியாளர்கள் மூடி மறைக்கின்றனர்.

எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் என்பது ஜனநாயகப் படுகொலை. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் தமிழர் அல்லாதவர்களை பி.ஜே.பி. இறக்குமதி செய்து, தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழித்துவருகிறது. இப்போது தி.மு.க-வுடன் நட்பு ரீதியாகத்தான் பழகி வருகிறோம். ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அ.தி.மு.க அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, அவர்களுக்கு தேர்தல் ஆணையம் தண்டனை கொடுத்தால்தான், அத்தொகுதியில் நடைபெற இருக்கும் இடைத் தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கும்" என்றார்.