வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (15/10/2017)

கடைசி தொடர்பு:08:01 (16/10/2017)

’டெங்கு பாதிப்பால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு’: திருமாவளவன் கோரிக்கை

மத்திய, மாநில அரசுகள் டெங்குவில் அரசியல் செய்வதை விட்டுவிட்டு, அதனால் பாதித்தவர்களின் நிலைகுறித்து வெள்ளை அறிக்கை வெளிடவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். 
                                        
 அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்துக்கு வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது டெங்குக் காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்தவும் தடுக்கவும் மாநில அரசுக்கு எவ்வளவு பொறுப்பு இருக்கிறதோ அதேபோல மத்திய அரசுக்கும் பொறுப்பு உள்ளது. மத்திய மருத்துவக் குழு டெங்கு நோயைக் கட்டுப்படுத்த உலக சுகாதாரத் துறை எத்தகையை வழிகாட்டுதலை தந்துள்ளதோ அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். டெங்குக் காய்ச்சல் கொள்ளை நோயாகும். கொல்லை நோய் தடுப்பு சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. அதன் அடிப்படையில் இந்த நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து இதனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.

தமிழக அரசு டெங்கு நோய் பாதிப்பு குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.மத்திய, மாநில அரசுகள் டெங்கு விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டாம். மக்களின் அச்சத்தைப் போக்குவது அரசின் கடமையாகும். மொழி வழி தேசிய உரிமை நாளை ஒட்டி நவம்பர் 1-ம் தேதி சென்னையில் எனது தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. மாநில சுயஆட்சி மாநாட்டில் தீர்மான விளக்கப் பொதுக் கூட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது. ம.தி.மு.க. சார்பில் நடத்தப்படும் மாநில சுயாட்சி மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும்.

அரியலூரில் மருத்துவ இணை இயக்குநர் அலுவலகம் அமைக்க வேண்டும்.டெங்குக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குழு அமைப்பதற்கு வசதியாக அமையும். எனவே, தமிழக அரசு இனிமேலும் தாமதப்படுத்தாமல் அரியலூருக்கு தனியாக மருத்துவ இணை இயக்குநரை நியமனம் செய்ய வேண்டும்’ என்றார்.