வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (15/10/2017)

கடைசி தொடர்பு:07:56 (16/10/2017)

இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!

நெல்லையில் சமூக நல அமைப்புகளின் ஏற்பாட்டில் கைவிடப்பட்ட குழந்தைகள், தீபாவளிப் பண்டிகைக்கு புத்தாடை எடுக்க கடைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மகிழ்விக்கப்பட்டனர். 

தீபாவளி கொண்டாட்டம்

புத்தாடை மற்றும் பட்டாசு இல்லாமல் தீபாவளி முழுமையடையாது. தீபாவளிக்கு புத்தாடையைத் தேர்வு செய்ய குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் செல்லும்போது ஏற்படும் மகிழ்ச்சி அலாதியானது. ஆனால், யாருமற்ற குழந்தைகளுக்கு இந்த மகிழ்ச்சியை தருவது எப்படி?. இப்படிச் சிந்தித்த சமூக நல ஆர்வலர்கள், 50 கைவிடப்பட்ட குழந்தைகளை தங்களுக்கான தீபாவளி புத்தாடையைத் தேர்வு செய்ய நேரடியாக கடைக்கு அழைத்துச் சென்று மகிழ்வித்தனர். 

நெல்லையில் உள்ள ‘சரணாலயம்’ இல்லத்தில் ஆதரவற்ற நிலையில் உள்ள 15 சிறுவர்களும், 12 சிறுமியர்களும் தங்கியுள்ளனர். அங்குள்ள குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் புத்தாடைகளை பல்வேறு அமைப்பினர் வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் அன்னை தெரசா அறக்கட்டளை அமைப்பைச் சேர்ந்த மகேஷ் மற்றும் அவரது நண்பர்கள், அந்தக் குழந்தைகளை நேரடியாக கடைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். 

சமூக நல ஆர்வலரான அந்தோணிகுரூஸ் அடிகள், சரணாலயம் இல்லத்தின் தலைவரான ஜெயபாலன் அடிகள் ஆகியோர் தலைமையில் 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், பாளையங்கோட்டையில் உள்ள பெரிய வணிக நிறுவனத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவரவர்க்குப் பிடித்தமான ஒரு செட் துணியை தேர்வு செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். சிறுவர், சிறுமியர் உற்சாக மிகுதியால் தங்களின் நண்பர்களுடன் கலந்து பேசி, உற்சாகமாக துணிகளைத் தேர்வு செய்தனர். ஒரு சிலர் விரைவாக துணிகளைத் தேர்வு செய்த போதிலும், சிலருக்கு நேரம் அதிகம் பிடித்தது, 

குழந்தைகள் மகிழ்ச்சி

குழந்தைகளின் துணிகளுக்கு தலா 1,000 ரூபாய் வீதம் வழங்க அன்னை தெரசா அறக்கட்டளை அமைப்பினர் முடிவு செய்திருந்தனர். ஆனால், பாண்டலூன் துணி நிறுவனத்தில் 1500 வரை துணிகளின் விலை இருந்தது. ஆனால், குழந்தைகளின் உற்சாகத்தைப் பார்த்து மகிழ்ந்த அந்த நிறுவனம் ஒவ்வொருவரின் துணிகளுக்கும் எவ்வளவு அதிகமாக விலை இருந்தபோதிலும், ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்க முன்வந்து சமூக ஆர்வலர்களை உற்சாகப்படுத்தியது. 

பின்னர், உயர்தர உணவகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு குழந்தைகள் அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது. அத்துடன், சிவகாசியில் இருந்து தயாராக வாங்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளும் அனைவருக்கும் வழங்கப்பட்டன. இதனால், தீபாவளி தினத்தின் மகிழ்ச்சி குழந்தைகள் முகத்தில் பொங்கி வழிந்தது. பின்னர், பாளையங்கோட்டையில் உள்ள ஹெச்.ஐ.வி பாதிக்கப்பட்ட குழந்தைகள் 23 பேர் இதே கடைக்கு அழைத்து வரப்பட்டு தீபாவளி உடைகளைத் தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்டனர். அவர்களும் மிகுந்த உற்சாகத்துடன் திரும்பிச் சென்றனர். சமூக ஆர்வலர்களின் இத்தகைய மனிதாபிமானம் மிகுந்த செயல் பாராட்டுக்கு உரியது.