'நூறு பேருக்கு முடியாவிடினும் ஒருவருக்கு அளியுங்கள்' - கோவையில் உணவு குறித்து விழிப்பு உணர்வு

உலக உணவு தினத்தை முன்னிட்டு, கோவையில் உணவு பகிர்வது குறித்து விழிப்பு உணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

 

உலகில் பசியால் வாடும் நாடுகள் குறித்து, சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வுக் கழகம் அண்மையில் வெளியிட்டப் பட்டியலில், இந்தியா 100-வது இடத்தில் உள்ளது. புதிய இந்தியாவிலும், பட்டினியின் முகம் மாறவில்லை. வறுமை, உடல்நலம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பட்டினி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், உலக உணவு தினம் நாளை கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, கோவையில், ''கோவை உணவு வங்கி '' என்ற தன்னார்வு அமைப்பு சார்பில், உணவு பகிர்தல் குறித்து விழிப்பு உணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. உங்களால் 100 பேருக்கு உணவு கொடுக்க முடியாவிடினும், ஒருவருக்கு உணவு கொடுங்கள் என்ற கொள்கையில் அந்த அமைப்பு இயங்கி வருகிறது. கோவை, சித்தாப்புதூரில் உள்ள அரசுப் பள்ளியில் இந்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

 

இதில், உணவு பகிர்தல் குறித்து தெருக்கூத்து நாடகம் நடத்தப்பட்டது. அதேபோல, உணவு பகிர்தல் குறித்து விழிப்பு உணர்வு கதைகளும் சொல்லப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். இதுகுறித்து, அந்த அமைப்பின் நிறுவனர் வைஷ்ணவி கூறுகையில், ’உலக மக்கள் தொகையைவிட 10 சதவிகிதம் அதிகமாகவே நம்மிடம் உணவு உள்ளது. ஆனால், பகிர்தல் இல்லாததால், பல்வேறு நாடுகளில் பட்டினி சோகம் தொடர்கிறது. நம் ஒவ்வொருவரின் வீட்டில் இருந்தும், நம் உணவில் இருந்து, ஒரு உணவை முடியாதவர்களுக்குப் பகிர்ந்தாலே, பட்டினியை துரத்த முடியும்’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!