வெளியிடப்பட்ட நேரம்: 02:20 (16/10/2017)

கடைசி தொடர்பு:09:40 (16/10/2017)

"வளர்ச்சி நோக்கிய பாதையில் பயணிக்கிறது இந்தியப் பொருளாதாரம்" - ஐ.எம்.எஃப் தலைவர்

"இந்தியாவின் பொருளாதாரம் திடமான வளர்ச்சி நோக்கிய பாதையில்தான் செல்கிறது" என்கிறார், சர்வதேச செலாவணி நிதியத்தின் (International Monetary Fund) தலைவர் கிறிஸ்டைன் லாகார்டே. 

பொருளாதாரம்

கடந்த வாரம், சர்வதேச செலாவணி நிதியம் வெளியிட்ட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிகுறித்த முன்கணிப்பு அறிக்கையில், '2017-18 நிதி ஆண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவிகிதம் என்ற அளவில் இருக்கும் என்று கணித்திருந்தது. இந்தியாவின் பொருளாதார மந்த நிலைக்கு 500 ரூபாய், 1000 ரூபாய் தாள்களின் மதிப்பு நீக்கமும், ஜி.எஸ்.டி அறிமுகப்படுத்தி இருப்பதையும் காரணம் காட்டியிருந்தது. 

இந்த அறிக்கைகுறித்து வாஷிங்டனில் செய்தியாளரிடம் பேசிய கிறிஸ்டைன் லாகார்டே. "இந்தியா முழுவதும் ஜி.எஸ்.டி கொண்டு வந்திருப்பது மிக முக்கியமான முன்முயற்சி நடவடிக்கை என்றே சொல்ல வேண்டும். இது கடினமான விஷயமாக இருந்தாலும், ஆச்சர்யமான விஷயமாகவே பார்க்கிறோம். இந்தியாவின் பொருளாதாரம், குறுகிய கால அளவில் கொஞ்சம் மந்த நிலையில் இருந்தாலும், நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில் இந்தியா நல்ல பொருளாதார வளர்ச்சிப் பாதையில்தான் பயணிக்கும் என்று கணித்திருக்கிறோம். 

கடந்த சில ஆண்டுகளாக, இந்தியப் பொருளாதாரக் கட்டமைப்பில் சீர்திருத்தங்கள் நடைபெற்றுவந்திருக்கின்றன. இந்தச் சீர்திருத்தங்களின் விளைவாகவே, இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்லும். மேலும், பொருளாதாரப் பற்றாக்குறை குறைந்து, பணவீக்கமும் குறைந்திருக்கிறது. இனி வரும் காலங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்து, இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று சொல்லியிருக்கிறார் கிறிஸ்டைன் லாகார்டே.

நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார், "2013-14 நிதி ஆண்டின் தொடங்கத்திலேயே பொருளாதார மந்த நிலை தொடங்கிவிட்டது. தற்போதைய நிதி ஆண்டின் முதல் காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 5.7 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. 2017-18 நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 6.9 சதவிகிதம் முதல் 7சதவிகிதம் என்ற அளவில் இருக்கும். அடுத்த நிதியாண்டில், இந்தியாவின் ஜி.டி.பி, 7.5 சதவிகிதம் என்ற அளவில் உயரும்" என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். 

பொருளாதாரம் உயர்ந்து வேலைவாய்ப்பு அதிகரித்தால் நல்ல விஷயமே.