"கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கேபிள் ஆபரேட்டர்கள் பற்றி புகார் தெரிவிக்கலாம்!" ஆட்சியர் அறிவிப்பு | Can complaint cable operators who collect more money, says District collector

வெளியிடப்பட்ட நேரம்: 03:15 (16/10/2017)

கடைசி தொடர்பு:15:58 (27/06/2018)

"கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கேபிள் ஆபரேட்டர்கள் பற்றி புகார் தெரிவிக்கலாம்!" ஆட்சியர் அறிவிப்பு

அரசு கொண்டுவந்திருக்கும் செட்டாப் பாக்ஸ் வழங்க கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கேபிள் ஆபரேட்டர்கள் பற்றி புகார் தெரிவிக்கலாம்' என்று கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார். 

 

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கடந்த 1.9.2017 அன்று தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் சந்தாதாரர்களுக்கு விலையில்லா செட்டாப் பாக்ஸ்களை வழங்கினார். மேலும், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிஜிட்டல் ஒளிபரப்புச் சேவைக்கான MPEG 4 என்ற தொழில்நுட்பத்தில் தரம் உயர்த்தப்பட்ட கட்டுப்பாட்டு அறையைத் திறந்துவைத்து டிஜிட்டல் ஒளிபரப்புச் சேவையைத் தொடங்கிவைத்தார். 

முதல்கட்டமாக, 32,000 செட்டாப் பாக்ஸ்கள் பெறப்பட்டு, அனைத்து செட்டாப் பாக்ஸ்களும் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக சந்தாதாரர்களுக்கு வழங்கப்பட்டு, செயலாக்கம்(Activation) செய்யப்பட்டுவருகின்றன.  உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள், சந்தாதாரர்களுக்கு செட்டாப் பாக்ஸ்களை விலையில்லாமல் வழங்க வேண்டும். மேலும், விலையில்லா செட்டாப் பாக்ஸ்களை சந்தாதாரர்களின் இடத்தில் நிறுவி, செயலாக்கம் செய்வதற்காக (Installation and one time Activation fee) 200 ரூபாய் மட்டும் பெற்றுக்கொள்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

விலையில்லா செட்டாப் பாக்ஸ் என்பதால், நிறுவுதல் மற்றும் செயலாக்கம் செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட 200 ரூபாய்க்கு மேல் சந்தாதாரர்கள் கூடுதலாக தொகை ஏதும் செலுத்த தேவையில்லை என்று இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது. எனவே, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சிக்னல் பெற்று பயன்பெறும் சந்தாதாரர்கள், இந்நிறுவனத்தின் விலையில்லா செட்டாப் பாக்ஸ்களை நிறுவும்போது, கேபிள் ஆபரேட்டர்களிடம் 200 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதுமானது, இதற்கு மேல் கூடுதல் தொகை வசூலிப்பது தொடர்பாக புகார் தெரிவிக்க வேண்டும் என்றால்,இந்நிறுவனத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 18004252911 க்கு தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.