வெளியிடப்பட்ட நேரம்: 08:15 (16/10/2017)

கடைசி தொடர்பு:13:48 (10/07/2018)

கரூர் எஸ்.பி அலுவலகத்தை பயமுறுத்தும் 'டெங்கு கொசு' தண்ணீர் தொட்டி... அச்சத்தில் மக்கள்!


 

டெங்கு காய்ச்சல் பீதி, நாளுக்கு நாள் தமிழகத்தை உலுக்கிக்கொண்டிருக்கிறது. 'எது சாதாரண காய்ச்சல், எது டெங்கு காய்ச்சல் என்று தெரியாமல் மக்கள் குழம்புகிறார்கள். இந்நிலையில், அரசு காலம் கடந்து 'டெங்குவால் பெரிய உயிர்ச்சேதம் இல்லை' என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில்,"தமிழக அரசும் அதிகாரிகளும் எவ்வளவு அசட்டையாக இருக்கிறார்கள் என்பதற்கு கரூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.பி அலுவலகத்துக்குப் பின்னால், கொசு வளரும் கேந்திரம் இருப்பதே உதாரணம். மக்களை விடுங்கள். மாவட்ட எஸ்.பி-க்கே மதிப்பில்லையா?" என்று மக்கள் கரித்துக்கொட்டுகிறார்கள்

என்னவென்று விசாரித்தோம். நம்மிடம் பேசிய கரூர் எஸ்.பி அலுவலகத்துக்கு பின்னால் உள்ள கோல்டன் சிட்டி பகுதியைச் சேர்ந்த மக்கள், "டெங்கு பீதி எங்களையும் விட்டு வைக்கலை. இந்தப் பகுதியிலேயே பலருக்கும் மர்மக்காய்ச்சல் வந்திருக்கு. சாதாரண ஜூரமா, இல்லை டெங்கு ஜூரமான்னு தெரியாம நாங்க அல்லாடுறோம். இந்தச் சூழலில், இரண்டாம் நம்பர் வீட்டுக்கு எதிர்ப்புறம் உள்ள வீடு பாதியில் கட்டியும் கட்டாமலும் அரைகுறையாக நிற்கிறது. அந்த வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிகள் திறந்து கிடக்கிறன்றன. அவற்றில், தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதில் குப்பைகளும் கிடக்கின்றன. அந்தத் தொட்டிகளில்தான் நோய் பரப்பும் கொசுக்கள் வகைதொகையில்லாமல் உற்பத்தியாகி, எங்கும் பரவிக்கொண்டிருக்கின்றன. இந்த இடத்திலிருந்து, கரூர் எஸ்.பி ஆபீஸ் கூப்பிடு தொலைவில்தான் இருக்கு. அதோட, இந்த கோல்டன் சிட்டி பிஸியான பகுதி. 5000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். இதுபோல, இந்தப் பகுதியின் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நின்று, கொசுக்களை உற்பத்தி செய்துகொண்டிருக்கிறது. ஆனால், யாரும் இங்கே கொசுவை ஒழிக்கவோ டெங்கு காய்ச்சலைத் தடுக்கவோ நடவடிக்கை எடுக்கவில்லை. இங்கு பள்ளிகள், கோயில்கள்னு முக்கிய இடங்களும் இருக்கு. ஆனால், இங்கு கொசு ஒழிப்பில் எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கலை. எஸ்.பி அலுவலகத்தில் உள்ளவர்களுக்குக்கூட இந்தப் பகுதி கொசுக்களால் நோய் பரவ அதிக வாய்ப்பிருக்கு. எங்களை விடுங்கள். நாங்களெல்லாம் ஆளும் அரசுக்கும் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் சாதாரணமாகத் தெரியலாம். 'இவர்களுக்காக நடவடிக்கை எடுப்பதா?' என்று எங்களை அசட்டையாகக் கருதலாம். ஆனால், கரூர் மாவட்ட எஸ்.பி ராஜசேகரனுக்கோ, எஸ்.பி அலுவலகத்தில் பணிபுரியும் மற்ற காவல்துறை அதிகாரிகளுக்கோ டெங்கு பரவாமல் இருப்பதற்காவது இந்தப் பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொள்ளணும். குறிப்பா, 2-ம் நம்பர் வீட்டுக்கு எதிரே கொசு உற்பத்திக் கேந்திரமாக இருக்கும் அந்த மூடப்படாத தண்ணீர் தொட்டிகளை க்ளீன் செய்யணும். இல்லைனா போராட்டம் நடத்துவோம்" என்றார்கள்.