வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (16/10/2017)

கடைசி தொடர்பு:15:36 (13/07/2018)

பாம்பனில் கரை ஒதுங்கிய அமோனியம் சல்பேட் பவுடர் பாக்கெட்!

பாம்பன் கடற்கரையில் கரை ஒதுங்கிய களை கொள்ளி அமோனியம் மூடைகள்

பாம்பனிலிருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற அமோனியம் களைக்கொல்லி மருந்து மூட்டைகள், குந்துகால் கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கின.

இலங்கையில், விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த பின், மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரினைப் பகுதிகளில் அதிக அளவில் கடத்தல் சம்பவங்கள் நடந்துவருகின்றன. இலங்கையிலிருந்து தங்கக்கட்டிகளும், இந்தியாவிலிருந்து போதை மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள், பீடி பண்டல்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியன, தொடர்ச்சியாகக் கடத்தப்பட்டு வருகின்றன. நாட்டில் உள்ள அனைத்து புலனாய்வு அமைப்புகளும் ராமேஸ்வரம் பகுதியில் இயங்கிவந்தாலும் இத்தகைய கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்களைக் பிடிக்கும் நடவடிக்கைகள் சொல்லிக்கொள்ளும்படியாக எதுவும் இல்லை. இலங்கையிலிருந்து தங்கம் கடத்திவருபவர்களை, மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவினர் மட்டுமே அவ்வப்போது பிடித்துவருகின்றனர்.

இந்நிலையில், பாம்பன் குந்துகால் கடற்கரைப் பகுதிகளில்  சில மூட்டைகள் ஒதுங்கிக்கிடப்பதாக, மண்டபம் கடற்கரைக் காவல் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து ,போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது, களைக்கொல்லியான அமோனியம் சல்பேட் பவுடர் பாக்கெட்டுகள் எனத் தெரியவந்தது. 4 சாக்கு மூடைகளில் கரை ஒதுங்கியிருந்த சுமார் 137  கிலோ எடைகொண்ட இந்த களைக்கொல்லி பவுடரை, கடற்கரைக் காவல் பிரிவு போலீஸார் கைப்பற்றி, விசாரணை நடத்திவருகின்றனர்.