வெளியிடப்பட்ட நேரம்: 14:33 (16/10/2017)

கடைசி தொடர்பு:18:24 (09/07/2018)

ரூ.256 கோடி கேட்பது கொள்ளையடிக்கவே! செங்கல்பட்டில் சீறிய விஜயகாந்த்

'மத்திய அரசிடம் டெங்கு காய்ச்சலுக்காக தமிழக அரசு ரூ.256 கோடி பணம் கேட்பது கொள்ளையடிப்பதற்காகவே' என்று தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. 400-க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பலியாகியுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் தமிழக அரசு, டெங்கு காய்ச்சலுக்கு 40 பேர் மட்டுமே பலியாகியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. டெங்குவை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக அமைச்சர்கள் புகார் கூறிவருகின்றனர்.

இதனிடையே, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் டெங்கு கொசு நடவடிக்கை குறித்தும் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகுறித்தும் மத்திய மருத்துவக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர். இந்த ஆய்வுக்குழுவினருடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது, டெங்குவை கட்டுப்படுத்த ரூ.256 கோடி தேவை என்று மத்திய குழுவிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இதை மத்திய அரசிடம் தெரிவிப்பதாக குழுவில் இடம் பெற்றவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருபவர்களை தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் நேரில் சந்தித்து உதவிகளை வழங்கிவருகிறார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் விஜயகாந்த் இன்று நோயாளிகளை சந்தித்தார். அப்போது, அவர்களுக்கு உதவிகள் வழங்கினார்.  அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''தமிழக அரசு டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தவறிவிட்டது. சுகாதாரத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசிடம் டெங்கு காய்ச்சலுக்காக தமிழக அரசு ரூ.256 கோடி பணம் கேட்பது கொள்ளையடிப்பதற்காகவே'' என்று குற்றம்சாட்டினார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்குறித்த கேள்விக்கு பதில் அளித்த விஜயகாந்த், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தே.மு.தி.க போட்டியிடாது. அதேநேரத்தில், எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்காது என்றார்.