தமிழக ஆட்சியாளர்களின் டெல்லி பயணங்கள்... அலுத்துக்கொள்ளும் மோடி! | Tamil political leaders travelling to Delhi have become a never ending saga

வெளியிடப்பட்ட நேரம்: 21:45 (16/10/2017)

கடைசி தொடர்பு:21:45 (16/10/2017)

தமிழக ஆட்சியாளர்களின் டெல்லி பயணங்கள்... அலுத்துக்கொள்ளும் மோடி!

பிரதமர் மோடி, ஓ.பி.எஸ். சந்திப்பு
 

மிழக ஆட்சியாளர்களின் அடுத்தடுத்த, டெல்லி பயணத்தால் பிரதமர் மோடி சலிப்படைந்து இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ''மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து, தமிழ்நாட்டுக்குப் பல நல்ல திட்டங்களைக்  கொண்டுவரவே நாங்கள் பாடுபடுகிறோம். அதற்காகவே இந்த டெல்லி பயணங்கள்'' என்கின்றனர்,  தமிழக அமைச்சர்கள். ''நிலைமை இப்படி இருக்க, பிரதமர் ஏன் சலித்துக்கொள்கிறார்'' என்று பி.ஜே.பி வட்டாரங்களில் விசாரித்தோம்.

"ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. அவர் இறந்த பின்னர், தமிழ்நாட்டில் ஒரு வெறுமை நிலவியது. நாட்டை ஆளும் பி.ஜே.பி-க்கு அனைத்து மாநில நலனிலும் அக்கறை இருக்கிறது. அந்த அடிப்படையில்தான், தமிழக ஆளும் கட்சியான அ.தி.மு.க-வுக்கு உதவிட  பி.ஜே.பி. முன்வந்தது; புதிய மந்திரிசபை அமையவும் உதவியது. பி.ஜே.பி., அப்போது தலையிடாமல் போயிருந்தால் அன்றே சசிகலா, முதல்வராக்கப்பட்டிருப்பார். ஓ.பன்னீர்செல்வம் அப்போதே சசிகலாவுக்கு எதிராகக் கொடி பிடித்திருப்பார். சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து ஆட்சியைக் கலைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். அப்படி நடக்காமல் காப்பாற்றியது பி.ஜே.பி-தான். கட்சியையும், ஆட்சியையும் உடையவிடாமல், இந்த உதவியைச் செய்து காப்பாற்றியது மட்டும்தான் பி.ஜே.பி. செய்த பெருந்தவறு. நாங்கள் (பி.ஜே.பி.)செய்த உதவிக்கு ஒட்டுமொத்த அ.தி.மு.க-வும் எங்களுக்கு விசுவாசமாக இருக்கும் என்று கணக்குப் போட்டோம். பி.ஜே.பி-யைத் தமிழகத்தில் வலுவாக்கிக்கொள்ள அ.தி.மு.க. தொண்டர்கள் துணை நிற்பார்கள் என்றும் நம்பினோம். கடைசியில் தமிழ்நாட்டு மக்களுக்கு பி.ஜே.பி-யை விரோதியாகக் காட்டியது மட்டும்தான் பலனாகக் கிடைத்தது.

ஏன், ஜல்லிக்கட்டு விவகாரத்தையே எடுத்துக்கொள்ளுங்கள்,  'ஜல்லிக்கட்டில் தீவிரவாத சக்திகள் பங்கேற்றன' என்று அன்றைய முதலமைச்சர் சட்டசபையில் சொன்னதற்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? பி.ஜே.பி-யைத் திருப்திப்படுத்துவதாக நினைத்து, அவர்களே  இப்படிப் பல விவகாரங்களில் மூக்கை நுழைத்தார்கள். ஓ.பன்னீர்செல்வத்தையோ, எடப்பாடி பழனிசாமியையோ நாங்கள் இயக்கவில்லை. பி.ஜே.பி-யை மட்டுமே இயக்கிக்கொண்டிருக்கிறோம். 

ஆளும் கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் ஒற்றுமையாக இல்லையென்றால், அது கட்சிக்கும் ஆட்சிக்கும் பலவீனம் என்பதை அவர்கள் உணரவேண்டும். மாறிமாறி துணை முதல்வரும், முதல்வரும் டெல்லிக்கு வந்துபோவதற்குக் காரணம், பி.ஜே.பி. அல்ல. சொல்லப்போனால், பிரதமர் மோடிஜீ, இவர்கள் இருவருக்குமே உடனடி அப்பாய்ன்மென்ட் கொடுப்பதும் இல்லை. அவர்களாக அடிக்கடி டெல்லிக்கு வருகிறார்கள், போகிறார்கள். முன்கூட்டியே தகவலைச் சொல்லி காத்திருந்து பார்த்துவிட்டுப் போகிறார்கள். சில விஷயங்களை எங்களால் வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை...." என்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், தமிழக துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர்செல்வம் தம்முடைய டெல்லி பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பியிருக்கிறார். அடுத்த சில நாள்களில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் டெல்லி பயணம் மேற்கொள்ளப்போவதாகக் கூறப்படுகிறது.


அ.தி.மு.க. வட்டாரங்களில் கேட்டோம், "ஓ.பி.எஸ். யார், யாரை டெல்லியில் சந்தித்தார், என்ன பேசினார் என்பதைத் தெரிந்துகொள்ளத்தான் எடப்பாடி டெல்லிக்குப் போகப் போகிறார். டெல்லிக்குப்போன ஓ.பி.எஸ்., தன்னுடைய மொத்த மனக்குறையையும் அங்கே சொல்லிவிட்டு வந்திருக்கிறார். அந்தக் குமுறல் மிகவும் நியாயமான குமுறல்தான்" என்றனர். ஓ.பி.எஸ். குமுறலின் முக்கியப் பகுதிகள் கட்சித் தொண்டர்களிடம் வைரலாகப்  பரவியிருக்கிறது. அந்தக் குமுறலில், "மற்ற மந்திரிகளைப் போலத்தான் நானும் ஒரு மந்திரியாக இருக்கிறேன்.  மந்திரிகளாவது, நினைத்ததைச் செய்து முடித்துக்கொள்கின்றனர். நான் எதையும் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. உங்களை (பி.ஜே.பி.) நம்பித்தான் நான் ஒன்றாக இணையச் சம்மதித்தேன். அதிகாரம் இல்லாத பொம்மையாகத்தான் என் பதவி இருக்குமென்று தெரிந்திருந்தால் நீதி கேட்டுப்போன நெடும் பயணத்தை அப்படியே தொடர்ந்திருப்பேன். ஒரு துணை முதலமைச்சராக இருந்தும், பர்சனல் செகரட்டரியாக நான் 'டிக்' அடித்த யாரையும் எனக்கு நியமனம் செய்யவில்லை.

தமிழே தெரியாத ஒருவரைத்தான் எனக்கு செகரட்டரியாகப் போட்டுள்ளனர். செகரட்டரியைப் போஸ்ட் செய்யும் அதிகாரம் எடப்பாடி கையில்தான் இருக்கிறது. பொதுவிழாக்களில் எனக்கு ஒரு சால்வை என்றால், அவருக்கு (எடப்பாடி) ஒரு சால்வை போடுகிறார்கள். பணி நியமன ஆணை வழங்கும் விழாவிலும் இதே கதைதான். நான் ஒருவருக்கு  நியமன ஆணையை வழங்கினால், முதலமைச்சர் எடப்பாடி ஒருவருக்கு பணி நியமன ஆணையை வழங்குகிறார். பொதுவெளியில் மட்டுமே எனக்கு உரிய மரியாதையும், அங்கீகாரமும் இருப்பதுபோல் காட்டப்படுகிறது. ஆனால், அப்படி எதுவும் இல்லை என்பதுதான் உண்மை"  இப்படிப் போகிறது ஓ.பன்னீர்செல்வத்தின் உள்ளக் குமுறல் என்கிறார்கள், அதைக் கேட்டவர்கள்.அடுத்த ரவுண்டு டெல்லிக்குப் போகப்போவது முதல்வர் எடப்பாடிதான். எடப்பாடி டெல்லி விசிட்டுக்குப் பின்னால் வெளியாகும் அந்தப் பக்கத்துத் தகவல், பல விஷயங்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவரக்கூடும்... 


டிரெண்டிங் @ விகடன்