வெளியிடப்பட்ட நேரம்: 16:47 (16/10/2017)

கடைசி தொடர்பு:16:52 (16/10/2017)

இரட்டை இலைச் சின்னத்தை நிரந்தரமாக முடக்க வேண்டும் : தினகரன் தரப்பு வாதம்

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற கட்சியில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை என்பதால், சின்னத்தை நிரந்தரமாக முடக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் டி.டி.வி.தினகரன் தரப்பில் வாதிடப்பட்டது.  


 

அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலைச் சின்னம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான இறுதி விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடந்துவருகிறது. அதில், தினகரன் தரப்பில் மூத்த வழக்கறிஞரும் முன்னாள் சட்ட அமைச்சருமான அஷ்வினி குமார் ஆஜராகினார். அதில், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தரப்பில் செப்டம்பர் 29-ம் தேதிக்கு முன்பாகத் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். சின்னம் தொடர்பாக எதிர்த்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் குளறுபடிகள் உள்ளன. அவற்றை ஆதாரபூர்வமாக நிரூபிக்கத் தயார். நிர்வாகிகளைக் கட்டாயப்படுத்தி, கையெழுத்திடச் செய்துள்ளனர். அவர்கள் தரப்பில் தாக்கல் செய்த ஆவணங்களின் உண்மைத்தன்மையை சோதித்துப் பார்க்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும். கட்சியின் பொதுச் செயலாளரைப் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்ய முடியாது என்று வாதிடப்பட்டது.

அதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில், பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்த யாரையும் நேரில் அழைத்து விசாரிக்க முடியாது. எழுத்துபூர்வமாக உங்கள் தரப்பு வாதங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தினகரன் தரப்பின் கோரிக்கையை நிராகரித்தனர். ’நாங்கள் இதுவரை 1,877 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவுப் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்துள்ளோம். அவற்றில் எதுவுமே போலியானவை அல்ல. பெரும்பான்மை எம்.பி மற்றும் எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு எங்களுக்கே உள்ளது’ என்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.