வெளியிடப்பட்ட நேரம்: 19:02 (16/10/2017)

கடைசி தொடர்பு:19:02 (16/10/2017)

டாஸ்மாக் மதுக்கடையைத் திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு: மாவட்ட ஆட்சியரிடம் மனு!

புதிதாக டாஸ்மாக் மதுக்கடைத் திறக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தக் கோரி கிராம மக்கள் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

டாஸ்மாக் எதிர்ப்பு

நெல்லை மாவட்டம் கடையம் யூனியனுக்கு உட்பட்ட கிராமம், தீர்த்தாரப்புரம். மடத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட இந்தக் கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடையைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது தீபாவளியன்று இந்தக் கடையைத் திறந்துவிட வேண்டும் என்கிற முனைப்புடன் அதற்கான பணிகள் நடைபெற்று வருவது சுற்றுப்புறத்தில் வசிக்கும் பெண்களை அச்சமடைய வைத்துள்ளது. 

டாஸ்மாக் மதுக்கடைத் திறப்பது தங்கள் பகுதியின் அமைதியைக் கெடுத்துவிடும் எனச் சுற்றுப்புறக் கிராமத்தினர் அஞ்சுகின்றனர். அதனால், மதுக்கடைத் திறக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரியிடம் இன்று பொதுமக்கள் மனு அளித்தனர். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் கடையம் ஒன்றியச் செயலாளரான பெரியசாமி தலைமையில் பெண்களும் கிராமத்தினரும் திரண்டு வந்து மதுக்கடைக்கு எதிராக எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மதுக்கடைக்கு எதிர்ப்பு

இதுகுறித்து சமத்துவ மக்கள் கட்சியின் ஒன்றியச் செயலாளரான பெரியசாமி கூறுகையில், ``எங்கள் கிராமத்திலிருந்து அரை கி.மீ தூரத்தில் நாலாங்கட்டளைக் கிராமம் உள்ளது. அங்கு உயர்நிலைப் பள்ளி இருக்கிறது. பள்ளிக்குச் செல்லும் வழியில் மதுக்கடை அமைக்கப்பட்டால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். சிறுவர்கள்கூட மதுக்குடிக்கும் அவலத்துக்குத் தள்ளப்படும் வாய்ப்பு உள்ளது. அத்துடன், இந்தப் பகுதிப் பெண்களின் முக்கியத் தொழிலாக பீடி சுற்றும் தொழில் உள்ளது. அதற்காக பீடி கம்பெனிக்குச் செல்ல மதுக்கடையைக் கடந்தே செல்ல வேண்டியதிருக்கும் என்பதால் தேவையற்ற பிரச்னைகள் பெண்களுக்கு ஏற்படும்.

அதனால், இந்த மதுக்கடை அமைக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தோம். ஆனால், அவர் உறுதியான முடிவு எதையும் எங்களுக்குச் சொல்லவில்லை. அந்த மதுக்கடை திறக்கப்பட்டால் பொதுமக்களும் விவசாயிகளும் பெரும் துன்பத்தைச் சந்திக்க வேண்டியதிருக்கும். அதனால் கடையைத் திறந்தால் நாங்கள் சுற்றுப்புறக் கிராம மக்களுடன் சேர்ந்து போராடுவதைத் தவிர வேறு வழியில்லை’’ என்றார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க