வெளியிடப்பட்ட நேரம்: 17:34 (16/10/2017)

கடைசி தொடர்பு:17:49 (16/10/2017)

நீதிபதி வீட்டில் நகை, பணம் திருடிச் சென்ற கொள்ளையன்!

நீதிபதி ஒருவரின் வீட்டில் நடந்த கொள்ளைச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடலூர் உண்ணாமலைச் செட்டி சாவடியைச் சேர்ந்தவர் ரஹுமான். இவர், சென்னையில் குடும்பநல நீதிமன்றத்தில் நீதிபதியாக உள்ளார். நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர், இவரது வீட்டுக்குள் புகுந்து 2 பவுன் தங்க நகை மற்றும் 5,000 ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து இன்று, நீதிபதியின் மைத்துனர் கொடுத்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடிவருகின்றனர்.

படம் மாடல்


"கடலூர் மாவட்டத்தில் சமீப காலமாகக் கொலை மற்றும் கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்துவருகிறது. இதற்கு காரனம் போலீஸ் பற்றாக்குறைதான். சில காவல் நிலையங்களில் இன்ஸ்பெக்டர்களே இல்லாத நிலை உள்ளது. அதனால், கடலூர் மாவட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல், புதுவையில் குற்றச் செயல் புரிபவர்களுக்கும் கடலூர் மாவட்டம் சொர்க்க பூமியாக உள்ளது. பண்டிகை காலங்கள் என்றால், போலீஸாரின் பாடு திண்டாட்டம்தான். பெரும்பாலும், இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் 16 வயதிலிருந்து 30 வயதுக்குள்ளானவர்கள்தான். மாவட்ட எஸ்.பி விஜயகுமார் இதுவரை 100-க்கும் அதிகமானோரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளார். அப்படியிருந்தும் இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்துகொண்டுதான் உள்ளது. 24 மணி நேரமும் போலீஸ் காவலிருக்கும் ஒரு நீதிபதி வீட்டிலேயே கொள்ளை என்றால், சாதரண பொதுமக்களின் நிலையை நினைத்துப் பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கிறது" என்கிறார்கள் பொதுமக்கள்.