ஆசிரியரின் கழுத்தை பிளேடால் அறுத்த வாலிபர்! திருவண்ணாமலையில் பயங்கரம் | Government School Teacher attacked by unidentified youth in School premises

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (16/10/2017)

கடைசி தொடர்பு:20:00 (16/10/2017)

ஆசிரியரின் கழுத்தை பிளேடால் அறுத்த வாலிபர்! திருவண்ணாமலையில் பயங்கரம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக  பணியாற்றும் கார்த்திகேயன் என்பவரை, பள்ளி வாசலிலேயே வைத்து பிளேடால் கழுத்தில் கிழித்துவிட்டு தப்பி சென்றுள்ளார் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர். இதில் காயமடைந்த ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் பேசினோம், ’10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பெற்றோர் ஆலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்காகப் பெற்றோர்கள் வரவைக்கப்பட்டு இருந்தனர். ஒருவர் ஒருவராக வந்துகொண்டிருந்தனர். அப்போது 30 வயது கொண்ட நபர் ஒருவர் கார்த்திகேயன் சாரைப் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். பள்ளியில் வேலை பார்ப்பவர்கள் எதற்கு பார்க்க வேண்டும் என்று கேட்க, சாருக்குத் தெரிந்தவர் என்று கூறியுள்ளார். சார் ஸ்டாப் ரூம்ல இருப்பாரு போய்ப் பாருங்க என்று கூறியுள்ளனர். ஸ்டாப் ரூம் சென்ற அந்த நபர் கார்த்திகேயன் சார் யார் என்று கேட்டுள்ளார். உடனே கார்த்திகேயன் சார் `நான்தான் சொல்லுங்க' என்று கூறியுள்ளார். உங்களிடம் பேச வேண்டும் எனக் கூறி பள்ளியின் கேட் வரை பேச்சுக் கொடுத்துக்கொண்டே வந்து பள்ளியின் கேட்டுக்கு வெளியே வந்ததும், பிளேடால் அவரின் கழுத்தை அறுத்துவிட்டுத் தப்பியோடிவிட்டார். சாரின் கழுத்தில் ரத்தம் வருவதைப் பார்த்து வெளியில் இருப்பவர்கள் கூச்சல்போட, உடனே அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கார்த்திகேயன் சார் அமைதியானவர். மாணவர்களிடம் சத்தம்போட்டுகூட பேசமாட்டார்’ என்றார்.

இதுகுறித்து போளூர் டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் கூறுகையில், ’பள்ளியில் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது என்பதால் மாணவிகளின் பெற்றோராக இருக்குமா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம். கார்த்திகேயன் தனியாக டியூசன் நடத்தி வந்துள்ளார். அங்கு ஏதாவது பிரச்னைகள் வந்து அதன் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதா என்று விசாரணை நடத்தி வருகிறோம். தப்பியோடிய நபரைத் தேடி வருகிறோம். கூடிய விரைவில் பிடித்துவிடுவோம்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க