மகளின் தற்கொலைக்கு அனுமதிகேட்டு அதிகாரிகளை அதிரவைத்த தாய்!

மருமகனின் கொடுமையால் தவித்துவரும் மகளையும், மனம் நலம் பாதித்த 2 பிள்ளைகளையும் தற்கொலை செய்துகொள்ள அனுமதிக்க கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தவரை அதிகாரிகள் அறிவுரை கூறி திருப்பியனுப்பினர். 

மகள் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கோரி மனு கொடுத்த தாய்

 

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்களத்தைச் சேர்ந்தவர் பாத்திமா பீவி. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வந்த அவர், அங்கிருந்த அதிகாரிகளிடம் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவை வாங்கிப் படித்துப் பார்த்த அதிகாரிகள் அதிர்ந்துபோயினர். அதிகாரிகளை அதிரச் செய்த அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது இதுதான்.

ஆர்.எஸ்.மங்களத்தைச் சேர்ந்த சுபேர் அலி என்பவருக்கு என் மகளைத் திருமணம் செய்து கொடுத்தேன். அவர்களுக்கு மனநலம் பாதிப்படைந்த 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், என் மருமகன் சுபேர் அலி 2-வது திருமணம் செய்துகொண்டார். இதுகுறித்து ஜமாத்தில் புகார் செய்ததைத் தொடர்ந்து சுபேர் அலி, தனது வீட்டை என் பேரன்கள் பெயரில் எழுதிக் கொடுத்தார். இதன்பின் தினந்தோறும் குடித்துவிட்டு வரும் சுபேர் அலி, என் பேரன்கள் பெயரில் எழுதிக் கொடுத்த வீட்டைத் திரும்பத் தருமாறு கேட்டு என்னையும், என் மகள் மற்றும் மனம் நலம் பாதித்த 2 குழந்தைகளையும் கொடுமைப்படுத்துகிறார். இதுகுறித்து ஆர்.எஸ்.மங்களம் காவல் நிலையம் மற்றும் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், என் மகளும் 2 பேரக்குழந்தைகளும் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, அவர்கள் தற்கொலை செய்துகொள்ள அனுமதிக்கும்படியும், இதற்குக் காரணமான சுபேர் அலி மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். மனுவைப் பெற்ற அதிகாரிகள் சுபேர் அலி மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதுடன், தற்கொலைக்கு அனுமதி கோரி இனி இதுபோன்று மனு எழுதி வரக் கூடாது. அப்படி வந்தால் உங்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என பாத்திமா பீவிக்கு அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!