இல்லாத குளத்துக்கு செலவுக் கணக்கு! வடிவேலு பாணியில் ஒரு மோசடி | pool missing complaint in kancheepuram

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (16/10/2017)

கடைசி தொடர்பு:09:05 (17/10/2017)

இல்லாத குளத்துக்கு செலவுக் கணக்கு! வடிவேலு பாணியில் ஒரு மோசடி

இல்லாத குளத்துக்குத் தூர்வாரியதாகக் கணக்குக்காட்டி, முறைகேடு நடந்திருப்பதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடிவேலு பாணியில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

குளம் காணவில்லை என வடிவேலு பாணியில் புகார்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட தே.மு.தி.க செயலாளர் ராஜேந்திரன் இதுதொடர்பாகப் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், ‘காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் பகுதியில் உள்ளது பனையூர் பெரியகுப்பம். அந்தக் கிராமத்தின் 5-வது வார்டிலுள்ள குளத்தைக் கடந்த 2011-16 வரையிலான 5 ஆண்டுகளுக்குத் தூர்வாருவதாக வினோத்குமார் என்ற ஒப்பந்ததாரர் பேரூராட்சியில் அனுமதி பெற்றிருக்கிறார். குளத்தைத் தூர்வார மற்றும் பராமரிப்புக்காக 2 லட்சம் ரூபாய் அளவில் திட்ட மதிப்பு பெற்று, அந்தத் தொகையைப்  பெற்றுள்ளதாகத் தெரியவந்தது.

ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி இடைக்கழிநாடு பேரூராட்சி செயல் அலுவலர் கொடுத்த தகவலில், எந்தப் பணியும் நடைபெறவில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார். வினோத்குமார் குறிப்பிடும் 5-வது வார்டில் குளமே கிடையாது. பணி ஏதும் நடைபெறாமலே குளம் தூர்வாரப்பட்டிருப்பது தெரியவருகிறது. அப்படிப் பணி நடைபெற்றிருந்தால், அந்தக் குளத்தைப் பொதுமக்களின் பார்வைக்குக் காண்பிக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார். இல்லாத குளத்துக்குச் செலவு செய்த விவகாரம் காஞ்சிபுரம் பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க