கிரண்பேடியை முற்றுகையிட முயன்ற அரசு ஊழியர்கள்! புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவிக்கச் சென்ற துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை, தினக்கூலி ஊழியர்கள் முற்றுகையிட முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிரண்பேடி

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அரசுத்துறை ஒவ்வொன்றுக்கும் சென்று அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு இனிப்புகளை வழங்கி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துவருகிறார். அந்தவகையில் பொதுப்பணித்துறையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் கிரண்பேடி, தீபாவளி வாழ்த்துச்சொல்லும் நிகழ்ச்சி பொதுப்பணித்துறைத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட கிரண்பேடி, அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார். பின்னர் நிகழ்ச்சி முடிந்து அங்கிருந்து வெளியே வரும்போது, பொதுப்பணித்துறையில் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்கள் தங்களுக்கு நிலுவையிலுள்ள 14 மாத சம்பளத்தை வழங்க வலியுறுத்தி, அவரை முற்றுகையிட முயற்சி செய்தனர். அதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர்  போலீஸார் ஆளுநரைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். அதன்பின்பும் புதுச்சேரி அரசு மற்றும் துணைநிலை ஆளுநரைக் கண்டித்து கோஷங்களை எழுப்பி அலுவலகத்தின் வாயில் முன்பு ஊழியர்கள் சிறிது நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட தினக்கூலி ஊழியர்களிடம் பேசினோம். அவர்கள் கூறுகையில், ’கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொதுப்பணித்துறையில் 1,311 தினக்கூலி ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறோம். கடத்த 14 மாதங்களாக அரசு எங்களுக்குச் சம்பளம் வழங்கவில்லை. அதனால் எங்களால் தீபாவளிப் பண்டிகையைக்கூட கொண்டாட முடியவில்லை. எங்கள் கோரிக்கைகள் குறித்து ஆளுநர் கிரண்பேடியிடம் முறையிடத்தான் வந்தோம். ஆனால், அவர் எங்களை உதாசீனப்படுத்திவிட்டு, கோரிக்கை மனுவை மட்டும் பெற்றுச் சென்றுவிட்டார்’ என்று குற்றம் சாட்டினர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!