வெளியிடப்பட்ட நேரம்: 08:20 (17/10/2017)

கடைசி தொடர்பு:08:20 (17/10/2017)

கார் விற்பனை மட்டுமே வளர்ச்சியாகிவிடுமா - பிரதமரிடம் கேள்வி கேட்கும் யஷ்வந்த் சின்கா

பிரதமர் மோடி, இந்தியாவின் வளர்ச்சிகுறித்து பல்வேறு புள்ளிவிவரங்களோடு ஒரு மணி நேரம் உரையாற்றுகிறார். அதில், கடந்த ஆண்டில் ஏராளமான கார்களும், மோட்டார் சைக்கிள்களும் விற்பனை ஆகி இருப்பதாகக் குறிப்பிடுகிறார். உண்மையில் கார், மோட்டார் சைக்கிள் விற்பனையாவது மட்டுமே வளர்ச்சியா என்பதுகுறித்து மக்களின் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்' என்று கூறியிருக்கிறார், பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்கா.

யஷ்வந்த் சின்கா

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகுறித்து கட்டுரை வாயிலாகக் கருத்து தெரிவித்த யஷ்வந்த் சின்கா, இந்த முறை மகாராஷ்டிரா மாநிலம் விதர்பா பகுதியில் உள்ள அகோலா நகரில், விவசாயிகளுக்கான தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஏற்பாடுசெய்திருந்த பொதுக்கூட்டத்திலேயே அரசின்மீது விமர்சனத்தை முன்வைத்திருப்பது ஆளுங்கட்சியினருக்கு தர்மசங்கடத்தை உருவாக்கியிருக்கிறது. 

இந்தக் கூட்டத்தில் பேசிய யஷ்வந்த் சின்கா, 'மக்கள் சக்தியின் மூலமே மத்திய அரசைக் கட்டுப்படுத்த முடியும். அரசின்மீது மக்களின் பார்வை இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்பது சோஷலிசத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் கொள்கை. இதை, மக்கள் கடைபிடிக்க வேண்டும். 

ஏற்கெனவே, நாம் பொருளாதார இறங்குமுகத்தில் இருக்கிறோம். இந்த நிலையில், நான் சொன்னேன் என்பதற்காகப் பதில் புள்ளியியல் விவரங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு வாதத்துக்கு புள்ளியியல் உதாரணத்தைச் சொன்னால், அதற்கு எதிர்வாதமாக புள்ளியியல் விவரங்களைத் தேடுவதால் எந்த வளர்ச்சியையும் எட்டிவிட முடியாது. ஜி.எஸ்.டி-யில் இன்னமும் நிறைய ஓட்டைகள் இருக்கின்றன. அவற்றை எல்லாம் நீக்கி, நிறைய மாற்றங்களைச் செய்யவேண்டியது அரசின் கடமை" என்று அதிரடி காட்டியிருக்கிறார் யஷ்வந்த் சின்கா.