வெளியிடப்பட்ட நேரம்: 10:18 (17/10/2017)

கடைசி தொடர்பு:11:04 (17/10/2017)

முதல்முறையாக மின்சாரத்தைப் பார்த்த கோவை மலைக்கிராமம்!

கோவை அருகே உள்ள தூமனூர் மலைக் கிராமத்துக்கு, முதல்முறையாக மின்சார வசதி செய்துகொடுக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் வந்த கிராமம்

கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் தாலுகாவுக்கு உட்பட்ட அழகிய மலைக் கிராமம், தூமனூர். எவ்வித பரபரப்பும் இன்றி இயற்கைப் போர்வை போர்த்தப்பட்டு, பேரழகுடன் இருக்கும் இந்தக் கிராமத்தில், 120-க்கும் மேற்பட்ட பழங்குடி இனக் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனால், இந்தக் கிராமத்துக்கு சரியான சாலை இல்லை, மின்சாரம் இல்லை, ரேஷன் கடை இல்லை என இப்படி இல்லைகளுக்குப் பஞ்சம் இல்லை. இவர்கள், அருகில் உள்ள மாங்கரை என்ற பகுதிக்கு ஒருமுறை வந்து செல்ல ஜீப்புக்கு ரூ.50 செலவு செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால், 8 கி.மீ நடந்தே செல்ல வேண்டும். தூமனூர் கிராமம் மட்டுமல்ல, அருகில் உள்ள மற்ற மலைக் கிராமங்களிலும் இதே நிலைதான்.

மின்சாரம் வந்த கிராமம்

ஆனால், அந்த நிலை தற்போது மெள்ள மெள்ள மாறிவருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சேம்புகரை என்ற கிராமத்துக்கு மின்சார வசதி கொடுக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது தூமனூரும் முதல்முறையாக மின்சாரத்தைப் பார்த்துள்ளது. இந்தக் கிராமத்துக்கு மின்சாரம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கோவை, கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி, மின்சார விநியோகத்தைத் தொடங்கிவைத்தார். மேலும், அங்கு தமிழக அரசு சார்பாக டி.வி-யும் வழங்கப்பட்டது. அதேபோல, தீபாவளியை முன்னிட்டு வேட்டி, சேலை, இனிப்புகளும் வழங்கப்பட்டன. பின்னர், அந்த மக்களுடன் இணைந்து எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி நடனம் ஆடினார். அந்த மலைக் கிராமங்களுக்கு தற்போதுதான் சாலைகள் போடப்படுகிறது, நடமாடும் ரேஷன் கடை அமைக்கப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக மின்சார வெளிச்சத்தில் அந்த மக்கள் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாட உள்ளனர். தூமனூரின் வெளிச்சம், மற்ற கிராமங்களுக்கும் பரவட்டும்.