4 வயதுச் சிறுவனை பலிகொண்ட மர்மக் காய்ச்சல்! டெங்கு பீதியில் மக்கள்

நெல்லை மாவட்டத்தில் மர்மக் காய்ச்சல் காரணமாக 4 வயதுச் சிறுவன் உயிரிழந்த நிலையில், பொதுமக்களிடம் டெங்கு பீதி ஏற்பட்டுள்ளது. 

காய்ச்சல் உயிரிழப்பு

நெல்லை மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சல் தீவிரமடைந்துள்ளது. மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக ஏராளமானோர் சிகிச்சைக்காக வருவதால் அரசு மருத்துவமனை வளாகத்தில் கூட்டம் அலைமோதுகிறது. நெல்லை மாநகரம் மட்டும் அல்லாமல் புறநகர் பகுதிகளிலும் காய்ச்சல் தீவிரமடைந்து வருகிறது. காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில், மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் அரசியல் கட்சியினர் மற்றும் சமூக நல அமைப்பின் நிலவேம்புக் கஷாயம் வழங்கப்பட்டு வருகிறது 

அத்துடன், டெங்கு நோயைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அடுத்த 15 நாள்களுக்கு மாவட்டம் முழுவதும் மாஸ் கிளீனிங் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், மர்மக் காய்ச்சல் காரணமாக 4 வயதுச் சிறுவன் உயிரிழந்த சம்பவம், பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சங்கரன்கோவில் அருகே உள்ள இலவங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்ற ஆட்டோ டிரைவரின் மகன் பிரேம்குமார் என்பவர் கடந்த நான்கு தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

கரிவலம்வந்த நல்லூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் பிரேம்குமாருக்குக் காய்ச்சல் குறையவில்லை. அதையடுத்து,சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுவன் பிரேம்குமார் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பகுதியில் பரவி வரும் மர்மக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!