செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்! ஒரு மணி நேரம் போலீஸை அலைக்கழித்த போதை ஆசாமி | A drunken youth climbed the cellphone tower to threaten the family members

வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (17/10/2017)

கடைசி தொடர்பு:14:31 (18/10/2017)

செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல்! ஒரு மணி நேரம் போலீஸை அலைக்கழித்த போதை ஆசாமி

நெல்லையில் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபரை கீழே இறங்க வைக்க காவல்துறையினர் திண்டாடினர். குடும்பப் பிரச்னைக்காக டவரில் ஏறிய இளைஞரை போலீஸார் கைதுசெய்தனர்.

தற்கொலை மிரட்டல்

நெல்லை, மேலப்பாளையம் குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். கூலி வேலை செய்துவருகிறார். காதல் திருமணம் செய்துள்ள இவருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளன. குடும்பத்தினரை எதிர்த்து திருமணம் செய்ததால் உறவினர்கள் அனைவரும் இவரிடம் சரிவரப் பழகுவதில்லை எனத் தெரிகிறது. இந்த நிலையில், சுரேஷூக்குக் குடிப்பழக்கம் ஏற்பட்டதால் தினமும் உழைக்கும் சம்பளத்தை குடித்துவிட்டு வந்துவிடுவதால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.

தீபாவளி சமயத்தில் வீட்டுக்குப் பணம் கொடுக்காததால் சுரேஷின் மனைவி அவரைக் கண்டித்துள்ளார். இதனால் தனது தந்தை மாசானத்திடம் சென்று தீபாவளி செலவுக்குப் பணம் கேட்டிருக்கிறார். அவர் தர மறுத்ததுடன், குடிப்பழக்கத்தைக் கைவிடுமாறு அறிவுரை சொல்லி அனுப்பி வைத்துவிட்டார். இதனால் அதிருப்தி அடைந்த சுரேஷ், கையிலிருந்த பணத்தை வைத்து மீண்டும் குடித்திருக்கிறார்.

தற்கொலை மிரட்டல் விடுப்பு

போதை தலைக்கேறியதும் அவர் அங்குள்ள செல்போன் கோபுரத்தில் மீது ஏறினார். இதைப் பார்த்த பொதுமக்கள் அவரை கீழே இறங்கும்படி வலியுறுத்தினர். ஆனால், இறங்க மறுத்த அவர் மேலிருந்து குதிக்கப் போவதாக மிரட்டினார். இதனால் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், கீழே இறங்க மறுத்து அடம்பிடித்ததால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பதற்றம் நிலவியது. 

பின்னர், தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை கீழே இறங்க வைத்தனர். பின்னர் போலீஸார் சுரேஷை கைதுசெய்தனர். சொந்தக் காரணத்துக்காகக் குடிபோதையில் செல்போன் டவர்மீது ஏறி பதற்றத்தை உருவாக்கிய சுரேஷ்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.