தீயணைப்பு நிலையத்துக்கே வாடகைப் புகைச்சல்! கதிகலக்கிய காரைக்குடி நகராட்சி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அமைந்துள்ள மத்திய அரசு நிறுவனமான சிக்ரி, இந்தியப் பிரதமராக ஜவஹர்லால் நேரு இருந்தபோது 26.07.1948 அன்று திறந்துவைத்தார். இந்த சிக்ரி அமைய காரணமாக இருந்த வள்ளல் அழகப்பா செட்டியாரைப் பாராட்டிய நேரு உங்களுக்கு நான் வேறு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதும், அழகப்பாசெட்டியார் கேட்டது இதுதான்.

இந்த சிக்கிரியில் கெமிக்கல் ஆய்வகங்கள் இருப்பதால் தீயணைப்பு நிலையம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். உடனே தீயணைப்பு நிலையத்துக்கான உத்தரவைப் பிறப்பித்தார். அதோடுதான் திருநெல்வேலியிலிருந்து வந்திருந்த தீயணைப்பு வண்டியை அங்கேயே நிறுத்திவிட்டுப் போனார்கள்.

அந்த அளவுக்கு வரலாற்றுப் பெருமை வாய்ந்த தீயணைப்பு நிலையம் அமைந்திருக்கும் இடம் இலுப்பகுடி சமஸ்தானத்துக்குப் பாத்தியப்பட்டது. தற்போது காரைக்குடி நகராட்சிக்கு அனுபவபாத்தியமாக இருக்கிறது. பொதுமக்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் பாதுகாப்பாக அமைந்துள்ளது.

இந்தத் தீயணைப்பு நிலையத்துக்கு வாடகை ரூ.260 செலுத்தப்பட்டு வந்தது. ஆனால், தற்போது காரைக்குடி நகராட்சி நிர்ணயம் செய்திருக்கும் வாடகையால் அதிர்ச்சியடைந்திருக்கிறது தீயணைப்பு நிலையம். அப்படி எவ்வளவுதான் வாடகை என்று கேட்டால் தலை சுற்றும் அளவுக்கு ரூ.18,450 மட்டுமே. இந்த வாடகை உயர்வால் காரைக்குடிக்குத் தீயணைப்பு நிலையமே இல்லாமல் போகும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

இதுகுறித்து தீயணைப்பு அதிகாரிகளிடம் பேசும்போது, "முன்னாள் பிரதமர் நேரு அவர்களால் உருவானது இந்தத் தீயணைப்பு நிலையம். நாங்கள் பொதுமக்களுக்குச் சேவை செய்யக்கூடியவர்கள். தற்போது எங்கள் நிலையத்துக்கு வாடகை ரூ.240- லிருந்து ரூ.18,450 ஆக எந்த அரசாணையும் இல்லாமல் உயர்த்தியிருக்கிறது நகராட்சி. காரைக்குடிக்குத் தீயணைப்பு நிலையம் தேவையில்லை என்று இப்படி வாடகையை உயர்த்தியிருக்கிறது. ஆகையால், நாங்கள் காரைக்குடிக்கு வெளியில் 15 கி.மீ தூரத்துக்கு அப்பால் இடம் கிடைத்தாலும் செல்லத் தயாராக இருக்கிறோம். காரைக்குடியில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் நாங்கள் வருவதற்கு நேரமாகும். இது திட்டமிட்டே செய்திருக்கிறார்கள். ஏன் நகராட்சியில் ஏதாவது நடந்தால்கூட நாங்க வர நேரமாகும். அப்போது எங்கள் அருமை தெரியவரும் என்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!