'ராங் ரூட்டில் பயணிக்கிறதா டெங்கு ஒழிப்பு?': மருத்துவர்கள் வெளியிடும் அதிர்ச்சித் தகவல்!

டெங்கு

கொசு கடித்தாலே 'டெங்கு' கொசு கடித்ததோ என்று எண்ணும் அளவுக்கு இன்றைய சூழலில் தமிழகமே அரண்டுபோயுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அவரவர் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்துவதுடன் அரசின் பணி முடிந்துவிடுமா? என்பதே மருத்துவ ஆய்வர்களின் தற்போதைய கேள்வியாக உள்ளது.

’டெங்கு தேசம்’ ஆக அறியப்படும் இன்றைய தமிழகத்தில், அரசு தன்னுடைய செயல்பாடற்ற தன்மையால் பாதிப்பின் தீவிரத்தைக் கட்டுக்குள் வைக்கத் தவறியதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஒருபக்கம் குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்து வருகிறார். மறுபுறம் டெங்கு தன் கொடிய ஆயுதத்தால் பலி எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்டே வருகிறது. போர்க்கால நடவடிக்கை என அறிக்கையில் மட்டுமே நிலைத்து நின்றிருக்கும் உத்தரவுகள் களத்தில் செயல்படுத்தப்படுமா என்ற கேள்வியை எழுப்புவதற்கு முன்னர் ‘டெங்கு வைரஸும் இந்தியாவும்’ என்ற பின்னணியை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

முதன்முதலாக ‘டெங்கு’ வைரஸின் தாக்கம் 1980-களில் சென்னையில்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கும் முன்னதாகவே இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது டெங்கு வைரஸ் குறித்த ஓர் ஆய்வு மையத்தை ஹரியானா மாநிலம் சோனாபெட் பகுதியில் தொடங்குகிறார். ஆனால், ஏதோவொரு காரணத்துக்காக இந்திராவின் ஆய்வுத்திட்டம் முடக்கப்படுகிறது. பின்னர் 1996-ம் ஆண்டு டெங்கு வைரஸ் தலைநகர் டெல்லியில் பரவத் தொடங்குகிறது. அந்நேரம் டெங்குவால் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர், 400-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். டெங்கு வைரஸ் பூதாகரமாக அரசை ஆட்டத்தொடங்கியபோது கொல்கத்தாவில் மீண்டும் ஓர் ஆய்வு மையம் தொடங்கப்பட்டு, அன்றைய டெங்கு கொசு குறித்த மூலக்கூறு ஆய்வு தொடங்கப்பட்டது. அப்போது ‘டெங்கு வைரஸ்’ என்பது இந்தியாவில் புதிதாக வந்துள்ள ஒரு வகை வைரஸ் என்றும், இதற்கு இந்திய வரலாறு ஏதுமில்லை என்றும் ஆய்வு முடிவில் அறியப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு ப்ளோஸ் என்ற பத்திரிகை இதழில் ’சென்னையில் மறைந்து கிடக்கும் டெங்குவின் பாதிப்பு’ என்ற தலைப்பில் ஓர் ஆய்வு சென்னை மாநகராட்சியுடன் இணைந்து நடத்தப்பட்டு, அது ஆய்வுக்கட்டுரையாக சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆய்வில் சென்னையில் 2015-ம் ஆண்டு மட்டும் 93% பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் 2,28,000 பேர் டெங்குவால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அதில் 288 பேர் பலியாகின்றனர் என்றும் ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறாக நடத்தப்பட்ட பல ஆய்வுகளின் மூலம் டெங்கு வைரஸ் மற்றும் அதன் மூலக்கூறு, அரசுக்குப் பல ஆண்டுகளாகவே தெரிந்த ஒரு வரலாறு. உலக சுகாதார நிறுவனத்தின் அறிவிப்பு மூலம் டெங்கு அதிகம் பாதித்த பகுதியாக ஐரோப்பா அறியப்படுகிறது. ஆனால் டெங்கு பலி மட்டும் ஆசியாவில்தான் அதிகம். ஆய்வுகளும், அறிக்கைகளும் கொண்ட நிலைப்பாடு ஒரு பக்கம் இருக்கட்டும். இன்றைய சூழலில் ஒரு மாநிலத்தை ‘டெங்கு தேசம்’ ஆக அறிமுகப்படுத்தும் ஒரு நிலை ஏற்பட்டது குறித்து மத்திய, மாநில அரசுகளின் நிலைப்பாடு என்ன என்பதே இன்றைய பெரும் கேள்வியாக நிற்கிறது.

மருத்துவர் புகழேந்திமத்திய மருத்துவக் குழுவின் வருகை மற்றும் தமிழகத்தின் டெங்கு ஒழிப்பு செயல்பாடு குறித்து மருத்துவர் புகழேந்தி மற்றும் கோவை மருத்துவர் ரமேஷ் ஆகியோர் இணைந்து கூட்டாக சில ஆய்வுகளை மேற்கொண்டனர். இதுகுறித்து மருத்துவர் புகழேந்தி பேசியபோது, “டெங்கு என்ற விஷயம் இன்று அரசியல் ஆக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவொரு மருத்துவ அறிவியல் தொடர்பான விஷயம். டெங்கு கொசுக்களில் ஐந்து வகை உண்டு. இதை அரசு அதிகாரபூர்வமாகவே ஒப்புக்கொண்டு ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. டெங்கு வைரஸை பரப்பும் கொசுக்களில் இரண்டு வகைகள் உண்டு. இவை இரண்டை ஒழிப்பதற்கும் இரண்டு வெவ்வேறு முறைகள் பின்பற்றப்பட வேண்டும். மேலும், டெங்கு பரப்பும் கொசுக்களுக்கு சில முக்கிய அம்சங்கள் உண்டு. அதாவது, டெங்கு பரப்பும் கொசு தூய்மையான நீரில் மட்டுமே வளரும். இந்தக் கொசுக்களால் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் பரவ முடியாது. இந்நிலையில் டெங்கு குறித்த பல அறிவியல்பூர்வ தகவல்களும் மத்திய, மாநில அரசுகளுக்கு ‘மூலக்கூறு’ ஆய்வு மூலம் இதற்கு முன்னர் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு முறையும் மூலக்கூறு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், பல பலிகள் ஏற்பட்டிருக்கும் இன்றைய சூழலில் தற்போதைய டெங்கு வைரஸ் குறித்து அரசு மூலக்கூறு ஆய்வு செய்யாதது ஏன்?. அவ்வாறு மூலக்கூறு ஆய்வு செய்திருந்தால் அதன் முடிவுகளை வெளியிடாதது ஏன்?. அரசியல் தலைவர்களும், மருத்துவர்களும் பொதுவெளியில் இதுகுறித்துப் பேசாதது ஏன்?’ என்று அறிவியல் பூர்வமாக எழும் கேள்விகளை நம் முன் வைத்தார்.

மேலும், ’டெங்கு’ வைரஸ் குறித்து முன்னரே பல வரலாறுகளையும் ஆய்வுப்பூர்வமாக அறிந்துள்ள அரசு தற்போது இதை ஒழிக்க அறிவியல் பூர்வமாகச் செயல்படாமல் வெறுமனே ‘சுற்றுப்புறத் தூய்மையை மேம்படுத்த’ மட்டும் செலவிட்டுக்கொண்டிருக்கிறது. இதுபோன்ற சூழல்களுக்காவே அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாகச் செயல்படுத்தியிருந்தால் இத்தகைய அபாயச் சூழல் ஏற்பட்டிருக்காது என்ற கருத்தும் வலம் வருகிறது. 

டெங்கு வைரஸ் என்பது குறிப்பாக சுற்றுப்புற மேலாண்மையால் மட்டும் கட்டுப்படத்தப்படக் கூடிய வைரஸ் அல்ல. புவி வெப்பமயமாதலாலும் நோய்கள் மற்றும் வைரஸ்களின் தாக்கம் பூமியில் அதிகரிக்கும் என்பது அறிவியல் அடிப்படை. ஆக, எல்லாம் தெரிந்தும் இந்த அரசு முறையான, சரியான வழியில் செல்லாமல், வீண் முயற்சிகளைப் போர்க்கால நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன? என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!