"தண்ணீரை மாற்றிக் குடிப்பதால்தான் காய்ச்சல் வருகிறது" - அமைச்சர் வேலுமணி கண்டுபிடிப்பு

தண்ணீரை மாற்றிக் குடிப்பதால்தான் காய்ச்சல் ஏற்படுவதாக அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறியுள்ளார்.

 

டெங்குக் காய்ச்சல் தமிழகத்தில் வேகமாகப் பரவி வருகிறது. தமிழக அரசு டெங்குவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கிறதோ, இல்லையோ டெங்குவுக்கான காரணம் குறித்து அமைச்சர்கள் போட்டிபோட்டு கருத்துக் கூறிவருகின்றனர். ''டெங்கு கொசு வருவதற்குக் காரணம், அந்தக் காலம்போல பெண்கள் வீட்டில் சாணி தெளிச்சு, மெழுகி கோலம் போடுவதில்லை, அந்தப் பழக்கம் மறைந்துவிட்டது. அதனால்தான் கொசு அதிகமாக உற்பத்தியாகிறது. அந்தக் காலத்தில் கொசு வரவில்லை. டெங்குவை முழுமையாக ஒழிக்கணும்னா, கொசுவை முழுமையா ஒழிச்சாப் போதும்’’ என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருந்தார்.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் டெங்குக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று ஆய்வுமேற்கொண்டார். கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், எம்.எல்.ஏ-க்கள் அம்மன் அர்சுனன், அருண்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, ''டெங்குக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் டெங்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் டெங்கு பாதிப்புகள் குறைந்துள்ளன. இதுவரை கோவையில் டெங்குக் காய்ச்சலுக்கு உயிரிழப்பே ஏற்படவில்லை. உயிரிழப்புகள் இல்லாததால்தான், கோவையில் ஆய்வு செய்ய மத்தியக் குழு வரவில்லை. தண்ணீரை மாற்றி குடித்தால்தான் காய்ச்சல் வரும். டெங்கு குறித்து மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் குட்கா குறித்துப் பேச அருகதை கிடையாது. ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. ஆட்சிதான். ஸ்டாலினுக்கு மக்களைப் பற்றி கவலையில்லை. ஆட்சியைக் கலைத்து முதலமைச்சராக வேண்டுமென்பதே அவரது ஒரே கொள்கை இதற்காக அவர் டி.டி.வி தினகரனுடன் கூட்டணி வைத்துள்ளார். ஆனால், ஸ்டாலின் முதலமைச்சராக முடியாது. கோவை அரசு மருத்துவமனையில், அமரர் ஊர்தி பற்றாக்குறை குறித்து, முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்வேன்’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!