வெளியிடப்பட்ட நேரம்: 09:13 (19/10/2017)

கடைசி தொடர்பு:09:13 (19/10/2017)

இரட்டை இலை யாருக்கு? அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஹண்டே சொல்லும் கணக்கு

 

“ஒரு தவறு செய்தால் அதை தெரிந்துசெய்தால்அவர் தேவன் என்றாலும் விடமாட்டேன் " என்று எங்கள் விட்டுப்பிள்ளை திரைப்படத்தில் எம் .ஜி.ஆர் பாடிய தத்துவப்பாடல் இது. அவர் ஆரம்பித்த அ.தி.மு.க-வில் தற்போது தவறுகள் மட்டுமே நடந்துகொண்டிருப்பதாகக் கொதிக்கிறார்கள் எம்.ஜி.ஆரின்  ரசிகர்கள்.

H.V.Hande

இன்றுவரை அ.தி.மு.க என்ற கட்சி ஆட்சியில் இருக்கிறது என்றால் அதற்கு எம் .ஜி.ஆர் என்ற மாபெரும் கலைஞன் விதைத்துபோன அன்பும், நம்பிக்கையும் அடிப்படைக் காரணங்களாக இருந்தன. அப்படியான அந்தக்  கட்சி இன்று மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்து ஆட்சி அதிகாரத்தை மையமாக வைத்துச் சுழல்வதாகவும் கொதிக்கிறார்கள் அவரது  ரசிகர்கள்.. 

தி.மு.க-வில் இருந்து பிரிந்த எம்.ஜி.ஆர் 17.10.1972 -ம் ஆண்டு அ.தி.மு.கவைத் தொடங்கினார். தொடங்கிய உடனேயே திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அரசியல் களத்திலும் அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார். தமிழக மக்கள் மனதில் அ.தி.மு.க-வை ஆழமாகப் பதியச் செய்தார். எம்.ஜி.ஆர் எனும் ஒற்றை மனிதரின் ஈர்ப்பால் லட்சக்கணக்கான தொண்டர்களைக் கொண்டு திகழ்ந்த அ.தி.மு.க-வில் எடப்பாடி அணி, தினகரன் அணி என்று இரண்டு அணிகள் இருக்கின்றன. ஓ.பி.எஸ் அணி எடப்பாடி அணியுடன் இணைந்தபோதிலும், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கட்சிக்குள் தனி ஆர்வதனம்தான் செய்கின்றனர். அ.தி.மு.க-வின் அணிகளில் நடைபெற்றுவரும் கூத்துகள் எல்லாம் எம்.ஜி.ஆரின் ரசிகர்களிடம் கவலையை ஏற்படுத்தி உள்ளன.

இரட்டை இலை . அதிமுக


இது குறித்து எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த எச். வி. ஹண்டேவிடம் இன்றைய அரசியல் சூழல் குறித்து பேசினோம். “எம். ஜி .ஆர் மறைவுக்குப் பிறகு ஜானகி அணி, ஜெயலலிதா அணி என அ.தி.மு.க இரண்டாக உடைந்தது. அதில் ஜெயலலிதா அணிக்குத் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டேன். அதேபோன்று ஜானகிஅணி தனியாக இயங்கியது.  இரு அணிகளும் 1989-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டனர். அ.தி.மு.க இரு அணிகளாகத் தேர்தலைச் சந்தித்த காரணத்தால் தி.மு.க 180 இடங்களும் ஜெயலலிதாவுக்கு 27இடங்களும் ஜானகிக்கு ஒரு இடமும் கிடைத்தது. ஜெயலலிதாவுக்கு இருந்த செல்வாக்கை உணர்ந்த ஜானகி, 'நீங்களே கட்சியை வழி நடத்துங்கள்' என்று  ஜெயலலிதாவிடம் கூறிவிட்டு ஒதுங்கிக்கொண்டார். இரண்டு அணிகளும் இணைந்ததை அடுத்து அப்போது இரட்டை இலைச் சின்னத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கின. எம்.ஜி.ஆரால் துணைப்பொதுச் செயலாளர்கள் ஆக நானும், ராகவனும் கையெழுத்திட்டால் இரட்டை இலைச்சின்னத்தை மீண்டும் தருகிறோம் என்று தேர்தல்ஆணையம்  தரப்பில் கூறினர்.

இதைத் தொடர்ந்து 11.02.1989 -ல் டெல்லி சென்ற நான், தேர்தல் ஆணையத்தில் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்தேன். அதன்பின்னர் அ.தி.மு.க-வுக்கு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக இரட்டை இலைச் சின்னத்தை மீண்டும் அளித்ததற்கான கடிதத்துடன், அடுத்த நாள் விமானம் மூலமாக சென்னை வந்து ஜெயலலிதாவின் கையில் அந்தக் கடிதத்தை ஒப்படைத்தேன். அதற்கு அடுத்த நாள் 13-ம் தேதி மருங்காபுரி, மதுரை மேற்கு தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் இரட்டை இலைச் சின்னத்தில் அ.தி.மு.க போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றது.

லட்சக்கணக்கான, கோடிக்கான தொண்டர்களைக் கொண்டிருக்கும் அந்தக்கட்சியின் நிலை, ஜெயலலிதாவின் மறைவால் நிலை குலைந்துள்ளது. அதேநேரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வமும், அந்தக் கட்சியை வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இரட்டை இலைச் சின்னத்துக்காக தினகரன் தரப்பும், எடப்பாடி பழனிசாமி தரப்பும் மோதிக்கொண்டு இருக்கிறார்கள். இதில் எம்.எல்.ஏ-க்கள் மெஜாரிட்டியை வைத்து தேர்தல் ஆணையம் முடிவு எடுத்தால் இரட்டை இலைச் சின்னம் எடப்பாடி பழனிசாமி அணிக்குக் கிடைக்கும்.

எடப்பாடி  பழனிசாமி - ஒ பன்னீர்செல்வம்

இரட்டை இலைச் சின்னம் கிடைத்தால் இன்னும் அந்தக் கட்சி பலமாகும். எம் .ஜி. ஆரின் செல்வாக்கால்தான் அந்தக் கட்சி ஆட்சியில் உள்ளது. அதனால் இந்த ஆட்சி இப்படியே தொடரும். ஸ்டாலின் தலைமையில் உள்ள தி.மு.க ஆட்சிக்கு வருவது கடினம்" என்றவரிடம் “எடப்பாடி பழனிசாமி, ஒ பன்னீர்செல்வம் இருவரையும் பி.ஜே.பி இயக்குவதாக்க் குற்றச்சாட்டு உள்ளதே? அதுகுறித்து உங்கள் பதில் என்ன” என்றதற்கு, "பி.ஜே பி-யின் நிலைப்பாடு இந்த ஆட்சி ஐந்தாண்டுகாலம் தொடர வேண்டும் என்பதுதான். மீண்டும் தேர்தல் வரக்கூடாது என்பதையே பி.ஜே.பி விரும்புகிறது” என்றார். 

“எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவால் வளர்த்த  இந்தக் கட்சியை இப்போதைய இ.பி.எஸ் அணியினர்  காப்பாற்றுகிறார்களா?" என்று கேட்டோம் அதற்கு, "இன்றைய தினம் இவர்கள் காப்பாற்றுவதாகத் தெரிகிறது. நாளை இந்தக் கட்சியையும் அவர்களின் பெயரையும் காப்பாற்றுவார்களா என்பது தெரியாது" என்றார்.


டிரெண்டிங் @ விகடன்