'மெர்சல்' படத்துக்கு தமிழிசை திடீர் எதிர்ப்பு!

'மெர்சல்' படத்துக்கு தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திடீரென எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். 


நடிகர் விஜய் நடித்துள்ள 'மெர்சல்' படம், பல்வேறு தடைகளைத் தாண்டி அறிவித்தபடி தீபாவளியன்று வெளியானது. தலைப்பு முதல் தகுதிச் சான்றிதழ் வரை பல்வேறு சிக்கல்களை 'மெர்சல்' படம் சந்தித்தது. தலைப்புக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கு தள்ளுபடிசெய்யப்பட்ட நிலையில், படத்துக்கு தணிக்கைக் குழு சான்றிதழ் அளிப்பதில் இழுபறி ஏற்பட்டது. விலங்குகள் நல வாரியம் தடையில்லாச் சான்று வழங்கிய நிலையில்,  படத்துக்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழை தீபாவளிக்கு முதல்நாள் தான் வழங்கியது.  

இந்த நிலையில், படத்தில் ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, அவற்றை நீக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை திருவொற்றியூரில், பொதுமக்களுக்கு பா.ஜ.க சார்பில் நிலவேம்புக் கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை,  '' ‘மெர்சல்' படத்தில் இருந்து ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்காவிட்டால், வழக்குத் தொடரப்படும். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்காக தவறான தகவல்களைப் பரப்பிவருகிறார்'' என்று தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!