வெளியிடப்பட்ட நேரம்: 14:35 (19/10/2017)

கடைசி தொடர்பு:09:01 (20/10/2017)

டெங்கு கொசு உற்பத்தி! 2 சி.பி.எஸ்.இ, தனியார் பள்ளிகளுக்கு அபராதம்!

நாமக்கல்லில் டெங்கு கொசு உருவாகும் வகையில் செயல்பட்ட இரண்டு சி.பி.எஸ்.இ பள்ளிகள் மற்றும் ஒரு தனியார் பள்ளிக்கு, மாவட்ட சுகாதாரத்துறை அபராதம் விதித்துள்ளது. 

தமிழகத்தில் டெங்குக் காய்ச்சலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதற்குக் காரணமான டெங்கு கொசுவை அழிக்கும் முயற்சியில் தமிழக சுகாதாரத்துறை ஈடுபட்டுவருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் உள்ளிட்டவர்கள், அரசு மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர். 

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் அரசு மருத்துவமனைகளில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, கொசுவை ஒழிக்க அலட்சியம் காட்டும் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துவருகிறார். பாதுகாப்புப் பணியில் முறையாக ஈடுபடவில்லை என்ற புகாரின் பேரில், புதுக்கோட்டை அரசு மருத்துவமனை பாதுகாவலர் சேதுராமனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர். மேலும், கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமற்ற நிலையில் இடத்தை வைத்திருக்கும் நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு, சுகாதாரத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்துவருகின்றனர். 

இந்த நிலையில், மூன்று பள்ளிகளுக்கு சுகாதாரத்துறை அபராதம் விதித்துள்ளது. நாமக்கல் மாவட்டம், கீரம்பூரில் உள்ள நவோதயா சி.பி.எஸ்.இ பள்ளி, சின்ன வேப்பநத்தத்தில் உள்ள நேஷனல் பள்ளிக்கு, தலா 25 ஆயிரத்தை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று விதித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் உள்ள குட்வில் மெட்ரிக் பள்ளிக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கொசு உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்க வைத்ததற்கும் பராமரிப்பு இல்லாததைக் கண்டித்தும் இந்தப் பள்ளிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.