அம்மா உணவகத்தைச் சூறையாடி ஜெயலலிதா படத்தைக் கிழித்த மர்ம நபர்கள்! | Perambalur Amma Canteen Ransacked

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (19/10/2017)

கடைசி தொடர்பு:15:40 (19/10/2017)

அம்மா உணவகத்தைச் சூறையாடி ஜெயலலிதா படத்தைக் கிழித்த மர்ம நபர்கள்!

பெரம்பலூரில் உள்ள அம்மா உணவகத்தை மர்மநபர்கள் சூறையாடி, அங்கு வைக்கப்பட்டிருந்த போஸ்டர்களில் இருந்த ஜெயலலிதா புகைப்படத்தைக் கிழித்தனர். 

Representative Image

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்மா உணவகத்தை, ஜான்சிராணி மகளிர் குழுவினர் பராமரித்துவருகின்றனர். அந்த உணவகத்தின் பூட்டை உடைத்து, நேற்று இரவு உள்ளே நுழைந்த மர்மநபர்கள், அங்கு சமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு, மசாலாப் பொருள்கள் மற்றும் காய்கறிகளைக் கொட்டி வீணாக்கியுள்ளனர். அங்கு வைக்கப்பட்டிருந்த சமையல் பொருள்களின் மதிப்பு ஒரு லட்சம் என்று கூறப்படுகிறது. மேலும், உணவகத்தில் இருந்த 400 ரூபாயைத் திருடிக்கொண்ட மர்ம நபர்கள், அம்மா உணவகத்தின் போஸ்டர்களில் இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா புகைப்படங்களையும் கிழித்துள்ளனர். இதுதொடர்பாக ஜான்சிராணி மகளிர் குழுவினர் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அம்மா உணவகத்தின் அருகில் உள்ள வணிக நிறுவனங்களின் சி.சி.டி.வி கேமராப் பதிவுகளைக்கொண்டு போலீஸார் விசாரித்துவருகின்றனர்.