திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா நாளை யாகசாலை பூஜையுடன் தொடக்கம்!

trichendur kovil

திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா நாளை 20-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கி வரும் 26-ம் தேதி வரை நடக்கிறது.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் கந்தசஷ்டி திருவிழாவும் ஒன்று. இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா நாளை காலை யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. இந்தத் திருவிழாவின் தொடக்க நாளான நாளை அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, காலை 6 மணிக்கு உற்சவமூர்த்தி சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்பாடு, காலை 9 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. மற்ற கால பூஜைகள் வழக்கமான நேரத்தில் நடக்கின்றன. 

trichendur soorasamharam

இத்திருவிழாவின் 2-ம் நாள் முதல் 5-ம் நாள் வரை தினமும் காலையில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜை, தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கமான நேரத்தில் நடக்கிறது. இத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி வரும் அக்டோபர் 25-ம் தேதி மாலை 4.30 மணிக்கு கடற்கரையில் நடக்கிறது. திருவிழாவின் கடைசி நாளான அக்டோபர் 26-ம் தேதி மாலை 6 மணிக்கு சுவாமி குமரவிடங்கப் பெருமாள் - தெய்வயானை அம்பிகை தோள்மாலை மாற்றுதலும் தொடர்ந்து இரவு 7 மணிக்கு திருக்கல்யாணமும் நடைபெறும்.

சூரசம்ஹாரத்தைக் காண தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் திருச்செந்தூரில் கூடுவார்கள் என்பதால் இந்த ஆண்டு 550 சிறப்பு பேருந்துகளும், 2 சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு வரும் 25ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!