ஹெல்மெட் கொள்ளையர்களால் வயதான தம்பதிக்கு நேர்ந்த சோகம்! சென்னை சாலையில் நடந்த அதிர்ச்சி

தாலிச்சங்கிலி பறிகொடுத்த லலிதா கணவருடன்

தாலிச்சங்கிலியைப் பறித்துக்கொண்டு பெண்ணைத் தாக்கிவிட்டுச் சென்ற ஹெல்மெட் கொள்ளையர்களால் கொளத்தூர் பகுதி பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

தாலிச்சங்கிலியைப் பறிக்கும் ஹெல்மெட் கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வழிப்பறி ஆசாமிகளிடம் தாலியைப் பறிகொடுத்த லலிதா, ராஜமங்கலம் காவல் நிலையத்தில் இதுகுறித்துப் புகார் அளித்துள்ளார். லலிதாவின் கணவர் ஏ.வி.நாராயணனிடம் பேசினேன். நடந்த சம்பவத்தை விவரித்தார். "எங்கள் வீடு, கொளத்தூர் நேர்மை நகரில் இருக்கிறது. தீபாவளி பண்டிகையைக் குடும்பத்துடன் கொண்டாட,  புழுதிவாக்கத்தில் வசிக்கும் என் மகள் வீட்டுக்குப் புறப்பட்டோம். நேற்று மாலை 4 மணிக்கு வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் என் மனைவியை அழைத்துக்கொண்டு போனேன். தாதாங்குப்பம், லிங்க் சாலை அருகே என்னுடைய பைக்கை உரசுவதுபோல் ஒரு பைக் வந்தது. திடீரென்று அந்த பைக்கில் இருந்த ஆசாமிகள் என் மனைவியைத் தாக்கி அவர் கழுத்தில் இருந்த தாலிச்சங்கிலியோடு, இன்னும் இரண்டு சங்கிலிகளையும் பறித்துக்கொண்டனர்.

தாலியை அவர்கள் வேகமாக இழுத்ததால் நான் பேலன்ஸ் தவறி பைக்கோடு கீழே விழுந்தேன். என் மனைவியும் சாலையில் விழுந்தார். எங்கள் இரண்டு பேருக்குமே கை, கால்களில் காயம் ஏற்பட்டது. நாங்கள் இருவருமே ரெகுலராக மருந்து எடுத்துக்கொள்ளும் பேஷன்ட்டுகள். பைக்கில் வந்து எங்களைத் தாக்கி, கீழே தள்ளிவிட்டு போனதால் மயக்கம் வந்துவிட்டது. அங்கிருந்த பொதுமக்கள் எங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து உதவினர். பைக்கை ஓட்டியவரும், பின்னால் இருந்தவரும் ஹெல்மெட் அணிந்திருந்தனர். எனக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டிருக்கிறது. என் மனைவி லலிதா, கீழே விழுந்த இடத்தில் பெரிய கல் இருந்ததால், அவர் வயிற்றுப் பகுதியில் பலத்த காயமாகிவிட்டது. மருத்துவமனையில் சேர்த்திருக்கிறேன். ராஜமங்கலம் போலீஸில் கொள்ளையர்கள் ஓட்டிவந்த பைக் எண்ணை  குறித்து புகார் கொடுத்திருக்கிறேன். சி.எஸ்.ஆர் காப்பியோ, எஃப்.ஐ.ஆரோ போட்டுக் கொடுங்கள் என்று  கேட்டேன். 'நாளைக்கு மதியத்துக்கு மேலே வந்து பாருங்கள்' என்று சொன்னார்கள். அங்கேதான் போய்க் கொண்டிருக்கிறேன்" என்றார் நாராயணன்.

ராஜமங்கலம் காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் விடுப்பில் உள்ளதால், சட்டம்- ஒழுங்கு இன்ஸ்பெக்டர் மாரியப்பன் இந்தப் புகார் மனுமீது விசாரணையை நடத்தி வருவதாகப் போலீஸார் தெரிவித்தனர்.கொள்ளையர்கள் ஓட்டிவந்த பைக் (pulsar 220 model, Tn -02, 8195) மாடல் மற்றும் பைக் எண் குறித்து ஆர்.டி.ஓ அலுவலகத்தில் விசாரித்தபோது, "பல்சர் 220 மாடல் 2000-ம் ஆண்டுக்குப் பின்னரே சந்தைக்கு வந்தது. அந்த மாடலில் டி.என். 02-8195 என்ற எண்ணே வழங்கப்படவில்லை. கண்டிப்பாக இது போலியான நம்பர் பிளேட்தான்'' என்றனர்.
ஆக, கொள்ளைக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் திருட்டு வண்டிதான்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!