வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (19/10/2017)

கடைசி தொடர்பு:16:30 (19/10/2017)

பட்டினப்பாக்கத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு: நிற்கதியில் மக்கள் 

சென்னை பட்டினப்பாக்கத்தில் சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த வீடுகள், கடைகள் இடிக்கப்பட்டன. இதனால் மக்கள் வீடுகளை இழந்து நிற்கதியில் நிற்கின்றனர்.

சென்னையில் அரசுக்குச் சொந்தமாள இடங்களில் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 10 மாவட்ட ஆட்சியர்கள் பதில் அளிக்க உத்தரவிட்டது. ஆனால், ஆட்சியர்கள் யாரும் பதிலளிக்கவில்லை. இதையடுத்து, அவர்கள் மீது நீதிமன்ற அவதூறு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 10 ஆட்சியர்களும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, 10 ஆட்சியர்கள் உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அப்போது, ஆக்கிரமிப்பு தொடர்பாக எந்தத் தயவு தாட்சணியம் எதுவும் பார்க்கக் கூடாது என்று உத்தரவிட்டது. இந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றம் நடவடிக்கையில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை பட்டினப்பாக்கம் மீனவக் குடியிருப்புப் பகுதிக்கு ஜே.சி.பி எந்திரம் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் இன்று வந்தனர். அப்போது, வீட்டைக் காலி செய்யும்படி அவர்கள் கூறினர். ஆனால், வீட்டைவிட்டு வெளியேற அவர்கள் மறுத்துவிட்டனர். இதையடுத்து, காவலர்கள் உதவியுடன் குடியிருப்புவாசிகளை வெளியேற்றிய மாநகராட்சி அதிகாரிகள் வீட்டை இடித்துத் தள்ளினர். வீடுகளை இழந்த மக்கள் நிற்கதியால் நின்றனர். "குழந்தைகளுடன் நாங்கள் எங்கே செல்லும். எங்களுக்கு அரசு மாற்ற இடம் தர வேண்டும்" என்று பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.