டெங்கு பரப்பினால் பிரிட்டிஷ் காலச் சட்டப்படி நடவடிக்கை: வீடு வீடாக ஆட்சியர் அதிரடி ஆய்வு! | Nellai collector warns people for spreading Dengue

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (19/10/2017)

கடைசி தொடர்பு:18:30 (19/10/2017)

டெங்கு பரப்பினால் பிரிட்டிஷ் காலச் சட்டப்படி நடவடிக்கை: வீடு வீடாக ஆட்சியர் அதிரடி ஆய்வு!

நெல்லை மாவட்டத்தில் டெங்கு ஒழிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் வீடு, வீடாகச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

டெங்கு ஒழிப்புப் பணி

தமிழகம் முழுவதும் டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நோயைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், நோயின் தீவிரம் குறையவில்லை. உயிரிழப்புகளும் தொடர்ந்தபடியே இருக்கின்றன. அதனால் இந்த நோயைப் பரப்பும் ஏடிஸ் வகைக் கொசுக்களைக் கட்டுப்படுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இயந்திரங்கள் மூலம் புகை மருந்துகளை அடிப்பது, கொசு முட்டைகள், புழுக்கள் உற்பத்தியாகாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பாதுகாப்பது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

தூய்மை செய்யப்படாத இடங்கள் மற்றும் டெங்கு புழுக்கள் உற்பத்தியாகக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டால் பொதுச் சுகாதாரச் சட்டம் 1939-ன் படி சட்டப் பிரிவுகள் 83, 84 ஆகியவற்றின் கீழ் மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 269-ன்படி, நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கெனவே சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தச் சட்டப்படி 6 மாதம் சிறைத்தண்டனை ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 

பிரிட்டிஷ் காலத்தில், உயிர்க்கொல்லி நோயாக இருந்த தட்டம்மை, காலரா போன்றவை அதிகமாகப் பரவி உயிரிழப்புகள் அதிகரித்தபோது, சுற்றுப்புறப் பகுதிகளைத் தூய்மையாக வைக்காதவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்தச் சட்டத்தில் சிறிய மாற்றங்கள் செய்து, புதிய வடிவில் மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதன்படி சென்னையில் மட்டும் 2000 பேருக்கு ஏற்கெனவே நோட்டீஸ் கொடுக்கப்பட்டுவிட்டது. தமிழகம் முழுவதும் 20,000 கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டிருக்கிறது.

நெல்லை மாவட்டத்தில் டெங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 200 கட்டட உரிமையாளர்களுக்குக் கடந்த வாரத்தில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வில், கழிவுநீர் செல்ல பாதை அமைக்காத வணிக நிறுவனங்கள், சுகாதார சீர்கேடு விளைவித்த வீடுகளின் உரிமையாளர்கள், டெங்குக் கொசுக்கள் வளரும் வகையில் சூழலை வைத்திருந்த புதிதாக வீடுகளைக் கட்டுபவர்கள், டயர், பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டியவர்கள் ஆகிய மேலும் 100 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. 

சந்தீப் நந்தூரி

இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் மாஸ் கிளீனிங் நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளான இன்று நொச்சிகுளம் கிராமப் பகுதியில் நடந்த துப்புரவுப் பணிகள், டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் விழிப்பு உணர்வு பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அத்துடன், வீடு வீடாகச் சென்ற அவர், குடிநீர்த் தொட்டிகள், டிரம்கள் உள்ளிட்டவை சுத்தமாகப் பராமரிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தார். டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளர்களிடம் பணிகளைத் தீவிரமாக மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.