வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (19/10/2017)

கடைசி தொடர்பு:17:25 (19/10/2017)

நிலவேம்பு கஷாயத்தைக் கேட்கும் வெளிநாடுகள்! பட்டியலிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர்

நிலவேம்பு கஷாயத்தை வெளிநாடுகள் கேட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆய்வு செய்தார். அப்போது, டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்துப் பேசியதோடு, இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு வார்டாக சென்ற அமைச்சர், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அவர் கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "தமிழகத்தில் பல மாவட்டங்களில் டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றார்.

நிலவேம்பு கஷாயம் பக்க விளைவுகளை ஏற்படுத்தாது என்றும் தவறான கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகள் நிலவேம்பு கஷாயத்தைக் கேட்டுள்ளன என்று தெரிவித்த அமைச்சர், 15 நாள்களில் டெங்குக் காய்ச்சல் முழுவதும் கட்டுப்படுத்தப்படும் என்றும் டெங்குக் காய்ச்சல் குறித்து தமிழக மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.