வெளியிடப்பட்ட நேரம்: 17:52 (19/10/2017)

கடைசி தொடர்பு:18:40 (19/10/2017)

புகை மூடிய சென்னை... காற்றின் தரம் பாதிக்கப்பட்டிருக்கிறதா? #AirQualityIndex

புகை சென்னை

 

தீயவை அழிக்கப்பட்டு, மன இருள் நீங்கி, உள்ளே ஒளி பாய்ந்து பிரகாசித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நாளான தீபஒளி திருநாள் நேற்று உலகெங்கும் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டின் தலைநகரமும், நான்காவது பெரிய நகரமுமான சென்னையில் நேற்று தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வெடிக்கப்பட்ட பட்டாசுகளால், சென்னை நகரம் முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது.

சர்வதேச தனியார் நிறுவனம் ஒன்று, சென்னையின் நான்கு முக்கிய இடங்களில் காற்றின் தரத்தை அளவிடும் (Air Quality Index) கருவிகளைப் பொருத்தியுள்ளது. சென்னை ஐ.ஐ.டி, மணலி, ஆலந்தூர், சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் உள்ளிட்ட இடங்களில், காற்றின் தரத்தை அளவிட கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அதில், வடசென்னைப் பகுதியான மணலியில் காற்றில் அதிக அளவு மாசு கலந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற மூன்று இடங்களில், காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் இருக்கிறதாம். இதே நிலைதான் சென்னையின் புறநகர் பகுதிகளிலும் இருந்தது.

மன இருள் நீங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நாம், இயற்கை அன்னையை துயரத்தில் ஆழ்த்தினோம் என்ற குற்ற உணர்ச்சி இல்லாமல் இருக்கிறோம். இயற்கையின் அழிவு நம்முடைய மற்றும் நம் சந்ததியினரின் அழிவு என்பதையும் மறந்து விட்டோம். நம் பூமியை சூழ்ந்துள்ள வளி மண்டலம், பல வாயுக்கலவை உடையதாகும், இதில் 79% நைட்ஜனும் 20% பிராணவாயும், 3% கரியமிலவாயும், சிறிதளவு பிற வாயுக்களும் உள்ளன. வாயுக்களின் இந்தச் சமச்சீர்நிலை மாறாமல் இருக்கும் வரையில் வளி மண்டலம் எந்தவித பாதிப்பும் அடையாது.  தீபாவளியின் மூலம் நாம் வெடிக்கும் பட்டாசு வளிமண்டலத்தைப் பெரிதும் பாதிக்கிறது.

தீபாவளியில் பட்டாசு வெடிப்பதன் மூலமும், அன்றாடம் பயன்படுத்தும் வாகனங்கள் மூலமும் நச்சுப் புகையை இந்த இயற்கைக்கு அழிவாய் அள்ளித் தந்த நாம் வளிமண்டலத்தைப் பாதுகாக்கவும், நம்மையும் நம் நாட்டையும் பாதுகாத்து வருங்கால சந்ததியினருக்கு ஆரோக்கிய வாழ்வை கொடுக்க மரங்களை நட வேண்டும். நீரின்றி அமையும் உயிரேது உலகில்? மரமும் அத்தகையதே.

புகை

இன்று வாழ்ந்து மடிந்து போன நம் மூத்த குடிகளின் முகச் சுருக்கங்களை, இன்று கொஞ்சமாக உயிரோடு இருக்கும் ஒவ்வொரு மரத்திலும், அதன் தடித்த மரப்பட்டைகளின் மடிப்புகளில் நாம் பார்க்கிறோம். இந்தச் செயலின் மூலம் நம்மை ஆரோக்கியப்படுத்திக் கொள்வது மட்டுமன்றி மரத்தின் வேர்கள் மண்ணை இறுக அணைத்தப்படி தழுவிக்கிடக்கும். மரத்தின் தடித்த, பழுப்பு நிற மரப்பட்டைகளில் நம் முகத்தினை நம் பிள்ளைகள் ஆரோக்கியமாகப் பார்ப்பார்கள்.


டிரெண்டிங் @ விகடன்