முருகன் பலியானதுக்கு மருத்துவர்களே காரணம்: நீதிமன்றத்தில் கேரள போலீஸ் அறிக்கை தாக்கல்!

கேரள முதல்வர் ஆறுதல்

கேரளாவில் தமிழகத்தைச் சேர்ந்த முருகன் மரணம் அடைந்ததற்கு, மருத்துவர்கள் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததே காரணம் என அந்த மாநில போலீஸார் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். 

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள துரைகுடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர், முருகன். சொந்த ஊரில் பிழைக்க வழியில்லாத நிலையில், கேரள மாநிலம் கோட்டயத்தில் தங்கியிருந்து பால் வியாபாரம் செய்துவந்தார். ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி முருகன் பைக்கில் சென்றபோது கொல்லம் அருகே சாத்தனூர் என்ற இடத்தில் எட்டிகாரா பாலத்தில் எதிரே வந்த பைக் மீது மோதி விபத்தில் சிக்கினார். 

இதில், பலத்த காயமடைந்த முருகனை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைகளுக்குச் சென்ற நிலையில், பல்வேறு மருத்துவமனைகளும் அவரை அனுமதிக்க மறுத்துவிட்டன. அவருக்கு உதவுவதற்கு ஆள் இல்லை என்பதாலும் பணம் இல்லாததாலும் அவரை 7 மணி நேரமாக ஆம்புலன்ஸிலேயே தூக்கிக்கொண்டு கோட்டயம், திருவனந்தபுரம் எனப் பல மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றும் சிகிச்சை அளிக்கப்படவில்லை. 

உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் முருகன் உயிரிழந்த சம்பவம் கேரளாவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரள அரசு சார்பாக முருகனின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார். அதன்பின்னர், தமிழக அரசும் 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த கேரள உயர்நீதிமன்றம், போலீஸார் அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர். 

முருகன் அதன்படி, இன்று அறிக்கையை போலீஸார் தாக்கல்செய்தனர். அதில், ’மருத்துவர்களின் பொறுப்பற்ற செயலின் காரணமாகவே முருகன் உயிரிழந்தார். அவருக்கு சிகிச்சை கிடைக்க தாமதம் ஏற்பட்டால் உயிரிழக்க நேரிடும் என்பது மருத்துவர்களுக்குத் தெரியும். ஆனாலும் சிகிச்சை அளிக்காமல் அவரைச் சுற்ற வைத்துள்ளார்கள்.

அதனால் இதில் தொடர்புடைய மருத்துவர்கள்மீது 304-வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம். சட்ட நிபுணர்களிடம் தொடர்ந்து விளக்கம் கேட்டிருக்கிறோம். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை தொடர்கிறது’ எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிக்கை காரணமாக பல மருத்துவர்கள்மீது வழக்குப் பதிவாகும் நிலை உருவாகி இருக்கிறது. இதனால் சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர்களும் மருத்துவமனைகளும் கலக்கம் அடைந்துள்ளன. கேரள மருத்துவர்கள் சங்கம் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. மருத்துவர்கள்மீ து வழக்குப் பதிவு செய்ய கேரள மருத்துவர்கள் சங்கம் ஏற்கெனவே எதிர்ப்புத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!