நிலவேம்புக்கு கமல் எதிர்ப்பு எனச் செய்தி பரப்புவதில் நியாயம் இல்லை - கமல் அறிக்கை

நிலவேம்புக் குடிநீரை தான் எதிர்க்கவில்லை எனவும், தனது நற்பணி இயக்கத்தாரை விநியோகிக்க வேண்டாம் என்று தான் கூறியதாகவும் அறிக்கை மூலம் விளக்கமளித்துள்ளார் கமல்ஹாசன்.

நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக ட்விட்டரில் பதிவிடும் கருத்துகள் விவாதப் பொருளாக மாறி வருகிறது. தமிழகத்தில் டெங்குக் காய்ச்சல் காரணமாக பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வேளையில், தமிழக அரசை கடுமையாக விமர்சித்து கருத்துகளைப் பதிவு செய்துவந்தார். 

அதேபோன்று நேற்று, தனது ட்விட்டர் பக்கத்தில், ”சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும்” என ட்வீட் செய்திருந்தார். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. 

கமல்ஹாசன் சித்த மருத்துவத்துக்கு எதிராகப் பேசி வருவதாக சித்த மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்தனர். நிலவேம்புக் கஷாயத்தை வெளிநாடுகளில் கேட்டு வருவதாகவும், அனுப்பப்பட்டு வருவதாகவும் தமிழக அமைச்சர் தெரிவித்தார்

நிலவேம்புக் குடிநீர் குறித்து பொதுமக்களுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்தாமல் வதந்திகளை கமல் பரப்பி வருகிறார் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்துத் தெரிவித்தார். இந்நிலையில், தனது கருத்து குறித்து கமல்ஹாசன் அறிக்கை மூலம் விளக்கம் தெரிவித்துள்ளார். அதில் அவர்,  “நான் நிலவேம்பை எதிர்க்கவில்லை. நிலவேம்புக் குடிநீரை நம் நற்பணி இயக்கத்தினர் விநியோகிக்க வேண்டாம் என்றுதான் கூறினேன். நிலவேம்புக்குக் கமல் எதிர்ப்பு எனச் செய்தி பரப்புவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை” எனத் தெரிவித்துள்ளார் 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!