'காற்று மாசுபடுதல் இதயநோய்க்கு வழிவகுக்கும்' எச்சரிக்கை செய்யும் மருத்துவர்கள் 

தீபாவளிப் பண்டிகைக்காக வெடிக்கப்பட்ட பட்டாசுகளால், சென்னையில் பல இடங்கள் புகைமண்டலமாகவே காட்சியளித்தன. சென்னையில் தீபாவளி தினத்தில் அளவிடப்பட்ட காற்றில், அளவுக்கு அதிகமாக மாசடைந்திருந்தது கண்டறியப்பட்டது. இந்த மாசடைதலால் சுற்றுச்சூழல் பாதிப்படையும் என்று நினைக்க வேண்டாம். பொதுமக்களின் இதய நோய்க்கும் இது முக்கிய காரணம் என்று கண்டறிந்திருக்கிறார்கள் மருத்துவர்கள். 

காற்று மாசுபடுதல்

ஓட்டுநர்கள், போக்குவரத்துக் காவலர்கள் என 500 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில், இவர்களில் பெரும்பாலானோருக்கு மாரடைப்புக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கண்டறிந்திருக்கிறார்கள். பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவர் மஞ்சுநாத், "மாரடைப்பு பிரச்னை என்று அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுபவர்களில் 20 சதவிகிதம் பேர் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அதிலும், காற்று மாசுபாடுகளுக்கிடையே வேலை பார்க்கும் ஓட்டுநர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்கிறார்கள். இவர்களுடைய ரத்தக்குழாய்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன" என்கிறார். 

இவர் "மாசடைந்த காற்றில் சல்ஃபர் டையாக்ஸைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு, காரீயம் எனப் பல்வேறு நச்சு வாயுக்கள் இருக்கின்றன. இவை, நாம் சுவாசிக்கும் காற்றுவழியே மனித உடலில் சென்று, ரத்தக்குழாயைச் சேதமடைய வைக்கின்றன. நாம் சுவாசிக்க உள்ளிழுக்கப்படும் காற்றின் அளவு மற்றும் கால அளவையும் கவனியுங்கள். வாகனப் புகை, தொழிற்சாலை புகை, பண்டிகை காலத்தில் பட்டாசு போன்றவற்றால் உருவாகும் புகைகள் எனக் காற்றில் உள்ள மாசுகள் எந்தவிதமான கட்டணமும் இல்லாமல் பதம் பார்க்கின்றன" என்று எச்சரிக்கையும்  செய்திருக்கிறார். 

"காற்றின் மாசுபாடு அதிகரிப்பால், உடலின் ரத்த அழுத்தம் உயர்கிறது. இதனால் பக்கவாதப் பிரச்னையை எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்படுகிறது. தற்போது, குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் நுரையீரல் மற்றும் இதயம் சார்ந்த நோய்கள் அதிக அளவில் கண்டறிந்து வருகிறோம். இதனால், காற்று மாசடையாமல் காப்பாற்றுவது நம்மையே நாம் காப்பாற்றிக்கொள்வதுபோன்றது" என்று எச்சரிக்கை செய்கிறார்கள் மருத்துவர்கள். இனியும் காற்று மாசடையாமல் காப்பது நம்முடைய செயல்களில்தான் இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!