வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (20/10/2017)

கடைசி தொடர்பு:12:50 (20/10/2017)

சென்னை பள்ளி மாணவிகள் நடத்திய டெங்கு விழிப்பு உணர்வு மனிதச் சங்கிலி!

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சாலையில், பள்ளி மாணவிகள் கைகளில் பதாகைகள் வைத்தபடி டெங்கு விழிப்பு உணர்வு மனித சங்கிலி நடத்தினர்.

'டெங்கு' என்ற வார்த்தை, தமிழக மக்களை பீதியில் உறையவைத்துள்ளது. காய்ச்சல் என்றதும் அலறியடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு மக்கள் படையெடுத்துவருகின்றனர். டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுவைக் கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருகிறது. கொசு உற்பத்திக்குக் காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இந்தச் சூழ்நிலையில், டெங்கு காய்ச்சல்குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் முயற்சியிலும் அரசு ஈடுபட்டுவருகிறது.

அதன் தொடர்ச்சியாக, சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பள்ளியில், இன்று டெங்கு விழிப்பு உணர்வு மனிதச் சங்கிலி நடந்தது. அழகப்பா சாலையில்,  'டெங்குவை ஒழிப்போம், உயிரைக் காப்போம்' போன்ற டெங்கு விழிப்பு உணர்வு பதாகைகளுடன் மாணவிகள் அணிவகுத்து நின்றனர். அப்போது,  'ஒன் டூ த்ரீ டெங்கு ஃப்ரீ' என்று கோஷமிட்டனர். இது, அவ்வழியாகச் சென்றவர்களின் கவனத்தை ஈர்த்தது. மனிதச் சங்கிலியையொட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.