‘திருந்தி வாழச் சொன்ன மக்கள்!’ - தீபாவளியன்று மிரளவைத்த திருடன் | Theif who looted bikes brings out a new reason for his deed

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (20/10/2017)

கடைசி தொடர்பு:13:30 (20/10/2017)

‘திருந்தி வாழச் சொன்ன மக்கள்!’ - தீபாவளியன்று மிரளவைத்த திருடன்

தீயில் எரிந்த பைக்குகள்

வில்லிவாக்கத்தில், தீபாவளி தினத்தன்று மூன்று பைக்குகள், சைக்கிள், கார் ஆகியவற்றை பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய வாலிபரை சி.சி.டி.வி.கேமரா மூலம் கண்டறிந்து, போலீஸார் கைதுசெய்தனர். அதோடு, அந்த வாலிபர் திருடிச்சென்ற பைக்கையும் போலீஸார் பறிமுதல்செய்தனர். 

சென்னை, வில்லிவாக்கம் தாமோதரபெருமாள் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள், பாஸ்கர், முரளி, மோகன். இதில், பாஸ்கர் டெய்லராகவும், முரளி தூர்தர்ஷன் தொலைக்காட்சியிலும் பணிபுரிகின்றனர். தீபாவளி தினத்தன்று நள்ளிரவு, அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது, கார் பார்க்கிங் பகுதியிலிருந்து கடும் புகையுடன் தீ மள மளவென எரிந்தது.  அதைப் பார்த்த அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்பவர்கள், அலறியடித்துக்கொண்டு அங்குவந்தனர். அப்போது, மூன்று பைக்குகள், ஒரு சைக்கிள், ஒரு காரின் கதவு ஆகியவை தீப்பிடித்து எரிந்தன. இதையடுத்து தீ அணைக்கப்பட்டது. இதில் மூன்று பைக்குள், ஒரு சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசமாகின. காரின் கதவு மட்டும் சேதமாகியிருந்தது. மோகனுக்குச் சொந்தமான பைக் திருட்டுப்போனது தெரிந்தது. எரிந்த பைக்குகள், பாஸ்கருக்கும் முரளிக்கும் சொந்தமானவை.

தீயில் எரிந்த பைக்


இந்தச் சம்பவம் குறித்து வில்லிவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸ் உதவி கமிஷனர் ஜெய்சிங் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் ஜாபர் ஜமால் விசாரணை நடத்தினார். அடுக்குமாடி குடியிருப்பிலிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிப் பதிவுகளை போலீஸார் ஆய்வுசெய்தனர். அப்போது, வாலிபர் ஒருவர் முகத்தில் துணியைக் கட்டிக்கொண்டு அடுக்குமாடி குடியிருப்புக்குள் நடந்துவரும் காட்சியும், பிறகு அந்த நபர் பைக்கை திருடிக்கொண்டு செல்லும் காட்சியும் பதிவாகியிருந்தன.

அதைக் கொண்டு போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து இரண்டு தெருக்கள் தாண்டியுள்ள பாரதியார் நகரைச் சேர்ந்த விஷ்ணு என்ற வாலிபர், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர், திருடிச்சென்ற பைக்கும் அங்கு அநாதையாகக் கிடந்தது. மேலும், அடுக்குமாடிக் குடியிருப்பு கார் பார்க்கிங் பகுதியில் பெட்ரோல் ஊற்றியதற்கான தடயங்களையும் போலீஸார் சேகரித்தனர். இதையடுத்து, போலீஸார் விஷ்ணுவைக் கைதுசெய்தனர்.

பைக்கை திருடிச் செல்லும் விஷ்ணு

இதுகுறித்து வில்லிவாக்கம் போலீஸார் கூறுகையில், "சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் சிக்கிய வாலிபர் விஷ்ணு என்று தெரிந்தது. இவர்மீது ஏற்கெனவே போலீஸில் வழக்குகள் உள்ளன. கடந்த 10 தினங்களுக்கு முன்புதான் சிறையிலிருந்து வெளியில் வந்தார். ஐ.டி.ஐ-யில் ஏ.சி மெக்கானிக் படித்த விஷ்ணு, வேலைக்குச் சரிவர செல்வதில்லை. போதையில் பைக்குகள், காருக்கு தீ வைத்துள்ளதாக அவர் விசாரணையில் தெரிவித்துள்ளார். அதற்கான மன்னிப்பும் கேட்டார். ஒருகட்டத்தில், புதிய பைக்குகள் வாங்கித் தருவதாக விஷ்ணு தரப்பில் போலீஸாரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால், போலீஸார் அவர்மீது வழக்குப்பதிந்து கைது செய்துள்ளோம்" என்றனர்.

 

 

வில்லிவாக்கம் பகுதி மக்கள் கூறுகையில், “விஷ்ணுவின் நடவடிக்கைகள் அந்தப் பகுதியில் பலருக்குப் பிடிக்காது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, அடுக்குமாடிக் குடியிருப்பில் குடியிருக்கும் ஒருவர், விஷ்ணுவிடம், இனிமேலாவது திருந்தி வாழப் பழகிக்கொள் என்று அறிவுரை கூறியிருக்கிறார். இது, விஷ்ணுவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதுவும் பைக்குகளை தீ வைக்கக் காரணம்" என்று சொல்கின்றனர்.


டிரெண்டிங் @ விகடன்