வெளியிடப்பட்ட நேரம்: 14:39 (20/10/2017)

கடைசி தொடர்பு:15:49 (20/10/2017)

'என்ன காய்ச்சல்னே எனக்குத் தெரியாது'- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திடீர் பல்டி

"தமிழகத்தில் பரவும் காய்ச்சல் என்ன காய்ச்சல் என்றே எனக்குத் தெரியாது. நான் மருத்துவர் இல்லை. மருத்துவர்கள்தாம் என்ன காய்ச்சல் என்று தெரிவிக்க வேண்டும்" என பல்டி அடித்துள்ளார், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

கடந்த வாரம், திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சில இடங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தவர், ''திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சல் காரணமாக யாரும் இறக்கவில்லை. அப்படி ஒருவராவது இறந்திருப்பதாக நிரூபித்தால், அதற்கு நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன்'' எனத் தெரிவித்தார். அப்போது, அமைச்சருடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வினய் மற்றும் நலப்பணிகள் இணை இயக்குநர் ஆகியோர் உடனிருந்தனர். சீனிவாசன் பேட்டி கொடுத்துக்கொண்டிருக்கும்போதே, வத்தலகுண்டு அருகே அம்பிகா என்ற பெண் டெங்குக் காய்ச்சல் காரணமாக இறந்த செய்தி வெளியானது. இந்நிலையில், அமைச்சரின் பேட்டியால் அதிர்ச்சியடைந்த தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, '' மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சல் காரணமாக இறந்தவர்களது பட்டியல் இதோ, எனப் பட்டியலையும் டெங்கு என்பதற்கான மருத்துவரின் அறிக்கையையும் வெளியிட, சூடானது அரசியல்களம்.

 இன்று காலை பழனியில், பாலாறு அணைநீர் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. அதில் கலந்துகொண்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சலால் யாரும் இறக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்த தகவலைத்தான் ஊடகங்களுக்குத் தெரிவித்தேன். தமிழகத்தில் பரவும் காய்ச்சல் என்ன காய்ச்சல் என்று எனக்குத் தெரியாது. நான் மருத்துவர் இல்லை. மருத்துவர்கள்தாம் என்ன காய்ச்சல் எனத் தெரிவிக்க வேண்டும் என பல்டி அடித்தார். கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளை, டெங்கு இல்லை எனச் சொல்லுங்கள் என அமைச்சர்தான் பிரஷர் கொடுத்தார் என அதிகாரிகள் புலம்பிக்கொண்டிருந்த நிலையில், அமைச்சர் அதிகாரிகள்மீது பழிபோட்டிருப்பது, அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க