வெளியிடப்பட்ட நேரம்: 17:15 (21/10/2017)

கடைசி தொடர்பு:17:15 (21/10/2017)

'இந்த ஆண்டு எம்.ஜி.ஆர். இல்லம்... அடுத்த ஆண்டு கோட்டை!' - தினகரனின் திடீர் வியூகம் #VikatanExclusive

 தினகரன்

அ.தி.மு.க-வின் 46-வது ஆண்டு விழாவை எம்.ஜி.ஆர் இல்லத்தில் கொண்டாட தினகரன் முடிவுசெய்துள்ளார். அடுத்தாண்டு, கோட்டையில் கொடியேற்றுவோம் என்று நம்பிக்கையுடன் ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

 அ.தி.மு.க-வில் சசிகலாவைப் பார்த்து பயந்தவர்களுக்கு திடீர் தைரியம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அமைதியாக இருந்த அமைச்சர்கள், இப்போது அதிரடி அரசியலில் ஈடுபட்டுவருகிறார்கள். குறிப்பாக சசிகலா, தினகரனுக்கு எதிரான விமர்சனங்களை, குறிப்பிட்ட சில அமைச்சர்கள் முன்வைத்துவருகிறார்கள். அவர்களைத் தவிர மற்றவர்கள் இன்னமும் சசிகலா, தினகரனுக்கு எதிராகப் பேசுவதில்லை. சசிகலா பரோலில் வந்த சமயத்தில், அ.தி.மு.க-வில் மாற்றம் நிகழும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டது. முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர், தேர்தல் ஆணையத்திடம் போராடிவருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில், அ.தி.மு.க-வின் 46-வது ஆண்டு விழாவை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சிறப்பாகக் கொண்டாடினார்கள். ஆனால், அன்றைய தினம் தினகரன் தரப்பினர் ஆண்டு விழாவைக் கொண்டாடவில்லை. இது, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சில நாள்களுக்கு முன்பு தினகரன், அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், அ.தி.மு.க நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர் வாழ்ந்த ராமாவரம் தோட்டத்தின் நுழைவு வாயிலிலுள்ள கழகக் கொடியை ஏற்றிவைத்து, எம்.ஜி.ஆரின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து, கழகத்தின் 46-வது ஆண்டு தொடக்க நாள் விழா சிறப்பு மலர் வெளியிடப்படும் என்று தினகரன் தெரிவித்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை தினகரன் ஆதரவு நிர்வாகிகள் செய்துவருகின்றனர். 

சசிகலா


 இதுகுறித்து தினகரன் ஆதரவாளர்கள் கூறுகையில், "இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க சட்ட நிபுணர்களுடன் தொடர்ந்து தினகரன் ஆலோசனை நடத்திவருகிறார். தேர்தல் ஆணையத்திடம் எங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்துள்ளோம். இதனால், இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில் எங்களுக்குச் சாதகமான முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். 
 பரோலில் சசிகலா வந்தபோது, சில முக்கிய ஆலோசனை நடந்தது. அதன்படி தினகரன் செயல்பட்டுவருகிறார். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்குப் பதிலடிகொடுப்பதைவிட மக்கள் சேவையில் ஈடுபட தினகரன் முடிவுசெய்துள்ளார். தற்போது நடந்துவரும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி, மக்கள் நலனில் அக்கறை செலுத்துவதில்லை. தற்போது, டெங்குக் காய்ச்சலால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் நிலவேம்புக் குடிநீரை இலவசமாக வழங்குவதாக தினகரன் தெரிவித்துள்ளார். அதன்படி நிலவேம்புக் குடிநீர் விநியோகித்துவருகிறோம். அதற்கு, மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அடுத்து, உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளிலும் ஈடுபட்டுவருகிறோம்.

அ.தி.மு.க-வின் ஆண்டு விழாவை இந்த ஆண்டு, எம்.ஜி.ஆர் இல்லத்தில் கொடி ஏற்றிக் கொண்டாடுவோம். அடுத்த ஆண்டு, கோட்டையில் கொடி ஏற்றுவதே எங்களுடைய இலக்கு. அதை நோக்கிப் பயணித்துவருகிறோம். கட்சித் தலைமை, துரோகக் கும்பலின் பிடியில் சிக்கியுள்ளது. இது, அ.தி.மு.க தொண்டர்களுக்கு மனவேதனையை அளித்துள்ளது. இருப்பினும் துரோகக் கும்பலை, சுயநலக் கூட்டத்தை சட்டரீதியாக தலைமைக் கழகத்திலிருந்து வெளியேற்றிக் காட்டுவோம். அதற்கான ஆலோசனையில் தினகரன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

தீபாவளி வாழ்த்துகள் சொல்ல தினகரனைச் சந்திக்க அனுமதி கேட்டிருந்தோம். ஆனால் அவர், சில நாள்களாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதால், யாரையும் சந்திக்கவில்லை. வரும் 24-ம் தேதி நடைபெறவுள்ள ஆண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டா உள்ளோம்" என்றார். 

தினகரனுக்குக் காய்ச்சல் 

 சசிகலா பரோலில் வந்த சமயத்தில் திவாகரன், காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், அவர் சசிகலாவைச் சந்திக்கவில்லை. தற்போது, தினகரன் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது, மருத்துவர்களின் கண்காணிப்பில் திவாகரனும் தினகரனும் உள்ளனர். தொண்டை வலி, உடல் வலி எனத் தினகரன் பாதிக்கப்பட்டுள்ளதால், யாரிடமும் அதிகம் பேசுவதில்லையாம். இதனால், அவர் தீபாவளியன்றுகூட நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கவில்லையாம்.


டிரெண்டிங் @ விகடன்