“ஸ்டாலின் பயணத்தில் அகில இந்தியத் தலைவர்கள்!” - தி.மு.க.வின் தேர்தல் ஜரூர் | Dmk starts its election work with the support of national leaders

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (20/10/2017)

கடைசி தொடர்பு:15:56 (20/10/2017)

“ஸ்டாலின் பயணத்தில் அகில இந்தியத் தலைவர்கள்!” - தி.மு.க.வின் தேர்தல் ஜரூர்

தி.மு.க - தலைவர்கள்.

'நமக்கு நாமே' போன்று தமிழகம் முழுவதும் எழுச்சிப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார் தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின். அடுத்த மாதம் தொடங்க உள்ள  இந்தப் பயணத்தில் அகில இந்தியத் தலைவர்களை வைத்து தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம் நடத்தவும் தி.மு.க திட்டமிட்டுள்ளது.

தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. பொதுச்செயலாளர் அன்பழகன், செயல்தலைவர் ஸ்டாலின், துரைமுருகன் மற்றும் தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு 'நமக்கு நாமே' என்ற பெயரில் மாவட்டந்தோறும் பயணம் மேற்கொண்டார். அதேபோன்று இப்போதும் ஓர் எழுச்சிப் பயணத்தை அடுத்த மாதம் தொடங்க உள்ளார். இந்தப் பயணம் குறித்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது என்கிறார்கள்.

மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் குறித்து தி.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “நமக்கு நாமே பயணம் போன்று ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு நாள் என்ற ரீதியில் இந்தப் பயணம் இருக்கபோவதில்லை என்பதை ஸ்டாலின் சொல்லியுள்ளார். மூன்று நாள்களில் பத்து மாவட்டங்களில் பயணம் செய்வது, மூன்று நாள்கள் பயணத்தின் முடிவில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவாகியுள்ளது. கன்னியாகுமரியில் வரும் நவம்பர் மாதம் 9-ம் தேதி அன்று இந்தப் பயணத்தை தொடங்கி, முன்றாவது நாள் மதுரையில் முதல்கட்டப் பயணத்தை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

'நமக்கு நாமே' பயணத்தில் மாணவர்கள், சுய உதவிக்குழுக்கள், தொழிலாளர்கள் எனப் பலதரப்பட்டவர்களையும் ஸ்டாலின் சந்தித்தார். ஆனால், அதுபோன்ற எந்தத் திட்டமும் இந்தப் பயணத்தில் இருக்கப்போவதில்லை என்பதை மாவட்டச் செயலாளர்களிடம் தெரிவித்துள்ளார். மாவட்டங்களின் முக்கிய நகரங்களில் ஸ்டாலின் உரையாற்றும் விதத்தில்தான் இந்தப் பயணத் திட்டத்தை திட்டமிடவேண்டும் என மாவட்டச் செயலாளர்களிடம் அறிவுறுத்தபட்டுள்ளது” என்றனர்.

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள்.

மேலும் “பத்து மாவட்டங்களை ஒரு மண்டலமாகப் பிரித்து மண்டலத்துக்கு மூன்று நாள்கள் என இந்தப் பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மண்டல வாரியாக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை செய்து ஸ்டாலின் பயணத்திட்டத்துக்கான ரூட்டை முடிவு செய்ய வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அறிவுரை சொல்லப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ஏழாம் தேதி ஸ்டாலின் எழுச்சிப் பயணத்தின் தொடக்க விழாப் பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் பொதுக்கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொள்ள உள்ளதாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதேபோல் அகிலேஷ் யாதவ், சீதாராம் யெச்சுரி போன்ற அகில இந்தியத் தலைவர்கள் தி.மு.க எழுச்சிப் பயணத்தின் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ள உள்ளார்கள்” என்றார்கள். இன்னும் ஓர் ஆண்டில் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெற உள்ளதால், அகில இந்திய அளவிலான தலைவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற திட்டம் தி.மு.க-வில் உள்ளது. அதை முன் வைத்தே ஸ்டாலின் தரப்பில் இந்த எழுச்சிப் பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தி.மு.க நிர்வாகிகள் சொல்கிறார்கள். 

தமிழக அரசியலில் குழப்பமான ஒரு சூழல் இருப்பதால் எந்த நேரத்திலும் தேர்தல் வரும் வாய்ப்புள்ளதென தி.மு.க நினைக்கிறது. இதனால் வாக்காளர்கள் பட்டியலை சரிபார்க்கவும் மாவட்டச் செயலாளர்களுக்கு இந்தக் கூட்டத்தில் உத்தரவிட்டுள்ளார் ஸ்டாலின். போலி வாக்காளர்களை நீ்க்குவது தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள் ஸ்டாலினிடம் கருத்துத் தெரிவித்தனர். தென் சென்னை மாவட்டச் செயலாளர் அன்பழகன், “வாக்காளர் பட்டியலில் முறைகேட்டை தவிர்ப்பதற்கு ஆதார் அட்டையைக் கட்டாயமாக்குவது குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

ஆதார் அட்டைக்கு எதிராக தி.மு.க-வின் நிலைப்பாடு இருப்பதால் போலி வாக்காளர்களை நீக்குவது குறித்து நீதிமன்றத்தின் உதவியை நாடலாம் என்று ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படும் சூழல் வந்தால், அதற்கு ஏற்ப முன்னேற்பாடுகளுடன் கட்சியின் நிர்வாகிகள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தபட்டுள்ளது. வெறும் பொதுக்கூட்டம் என்று அறிவித்தால் கட்சியினரிடம் உற்சாகம் இருக்காது என்பதால், எழுச்சிப் பயணம் என்ற பெயரில் ஸ்டாலின் பயணத்திட்டத்தை அறிவித்து, மாவட்ட வாரியாகப் பயணம் மேற்கொள்ளும்போது கட்சியின் அடிமட்டத் தொண்டர்களிடம் உற்சாகம் ஏற்படும் என்ற திட்டத்தில்தான் இந்தப் பயணத்திட்ட அறிவிப்பை தி.மு,க தலைமை கையில் எடுத்துள்ளதாகச் சொல்கின்றார்கள். 

தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்,டெங்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

ஸ்டாலின் போடும் கணக்குக்குச் சரியான விடை கிடைக்குமா?!


டிரெண்டிங் @ விகடன்