இரண்டு அணைகளைத் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு! 

விழுப்புரம் மாவட்டம், மணி முக்தா நதி அணை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம், ஆழியாறு அணை ஆகியவற்றைத் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோயம்புத்தூர் மாவட்டம், ஆழியாறு அணையிலிருந்து பொள்ளாச்சிக் கால்வாய், வேட்டைக்காரன்புதூர் கால்வாய், சேத்துமடைக் கால்வாய் மற்றும் ஆழியாறு ஊட்டுக் கால்வாய் பாசனப் பகுதிகளுக்கு பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கோயம்புத்தூர் மாவட்டம், ஆழியாறு அணையிலிருந்து பொள்ளாச்சிக் கால்வாய், வேட்டைக்காரன்புதூர் கால்வாய், சேத்துமடைக் கால்வாய் மற்றும் ஆழியாறு ஊட்டுக் கால்வாய்களில் இரண்டாம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்கு 25.10.2017 முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன். இதனால், கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள 22,332 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.
மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு, உயர் மகசூல் பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

இதேபோல விழுப்புரம் மாவட்டம், மணிமுக்தா நதி அணையிலிருந்து பழைய மற்றும் புதிய பாசனப் பரப்பு நிலங்களின் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மணிமுக்தா நதி அணையிலிருந்து பழைய மற்றும் புதிய பாசனப் பரப்பு நிலங்களுக்கு, பாசனத்திற்காக 22.10.2017 முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன். இதனால், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 5,493 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு,
உயர் மகசூல் பெற வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!