தீபாவளி சிறப்புப் பேருந்தின் மூலம் அரசுக்கு ரூபாய் 8 கோடி வருவாய்!

அரசு பேருந்து

தீபாவளி பண்டிகைக்காக விடப்பட்ட சிறப்புப் பேருந்தின் மூலமாக அரசுக்கு ரூபாய் 8.33 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் பெருநகரங்களிலிருந்து தங்களின் சொந்த ஊருக்குச் செல்வர். ஒரே நேரத்தில் பல லட்சப் பயணிகள் செல்வதற்கு வசதியாக தமிழகம் முழுவதும் 11,645 சிறப்புப் பேருந்துகளும், சென்னையிலிருந்து 4,820 பேருந்துகளும் இயக்கப்பட்டன. சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக 5 இடங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. தீபாவளியையொட்டி ஆம்னி பேருந்துகள் அதிகக் கட்டணக் கொள்ளையில் ஈடுபடக் கூடாது எனப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சோதனையில் ஈடுபட்டார். சோதனையின்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், "அதிகக் கட்டணக்கொள்ளையில் ஈடுபட்ட 14 தனியார் பேருந்துகள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

இந்த நிலையில் மக்கள் தீபாவளியைக் கொண்டாடிவிட்டு வேலை செய்யும் இடங்களுக்குக் கடந்த இரண்டு நாள்களாகச் செல்ல ஆரம்பித்துவிட்டனர். தீபாவளிப் பண்டிகையையொட்டி அரசுப் பேருந்தின் மூலம் சுமார் 8 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது எனப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், ''தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் சிரமமின்றி பயணம் செய்வதற்காக சிறப்புப் பேருந்துகள் கடந்த 15,16,17 ஆகிய தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக கோயம்பேடு, தாம்பரம், சைதாப்பேட்டை, பூந்தமல்லி, அண்ணா நகர் ஆகிய பகுதிகளிலிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன. கடந்த செவ்வாய் கிழமையன்று (17-10-2017) அன்று பயணிகள் தங்களின் சொந்த ஊருக்குச் செல்வதற்காக 1 லட்சத்து 48 ஆயிரத்துக்கும் அதிகமான நபர்கள் பேருந்துகளில் முன்பதிவு செய்திருந்தனர். அதன்மூலம் சுமார் 4 கோடியே 96 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. அதுபோலவே தீபாவளி முடிந்து மீண்டும் வேலை செய்யும் பெருநகரங்களுக்குச் செல்வதற்காக சுமார் 88 ஆயிரம் பயணிகளுக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்தனர். இதில் சுமார் 80,000 க்கும் அதிகமான பயணிகள் வெவ்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு வருவதற்கு முன்பதிவு செய்திருந்தனர். இதன்மூலம் சுமார் 2 கோடியே 96 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. மொத்தம் தீபாவளியை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகளின் மூலம் சுமார் 8 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Don't miss this

Do you like the story?

Please Appreciate the Author by clapping!