வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (20/10/2017)

கடைசி தொடர்பு:19:05 (20/10/2017)

'இப்படிப்பட்டவர்களால் கொசு உற்பத்தி அதிகரிக்கிறது' - ஆய்வில் சீறிய கலெக்டர் ரோகிணி

சேலம் கலெக்டர் ரோகிணி மற்றும் மாநகராட்சி அதிகாரிகளும் ஏரியாக்களுக்குச் சென்று பார்வையிடும் போது டெங்குக் கொசுக்கள் உற்பத்தியாவதற்கான காரணங்கள் இருந்தால் அதை அகற்ற அறிவுறுத்தினால் பொதுமக்களின் ஒத்துழைப்பு தராமல் அலட்சியம் செய்வதோடு, கொசு ஒழிப்பதற்கான செயல்களில் ஈடுபடும்போது அதைத் தடுத்தும் வருகிறார்கள்'' என்கிறார்கள் மாவட்ட நிர்வாகத்தைச் சேர்ந்தவர்களும், மாநகராட்சி ஊழியர்களும்.  

இதுகுறித்து விசாரித்த போது, ''இன்று காலை சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி சேலம் 60 டிவிசனுக்கு உட்பட்ட கொண்டலாம்பட்டி பகுதியைப் பார்வையிடச் சென்றார். அப்போது வீட்டிலிருந்த குடிநீர், குளியறைப் பகுதிகள், காலி இடங்களில் தேங்கியிருக்கும் தண்ணீர் குட்டைகள், தேவையற்ற தேங்காய்த் தொட்டிகள், பிளாஸ்டிக் கழிவுகளைப் பார்வையிட்டு அதை உடனே அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார். ஒரு வீட்டில் குளிப்பதற்காகத் தொட்டியில் பிடித்து வைத்து 4 நாள்கள் ஆன தண்ணீரில் புழுக்கள் இருக்கின்றன. அதைப் பார்த்த கலெக்டர் இதுபோன்று தண்ணீரைச் சேமித்து வைக்கக் கூடாது. புழு உண்டாகும். அதுவே கொசுவாக வளர்ச்சியடைந்து நம்மைக் கடிக்கும் காய்ச்சல் வரும் உயிரிழப்பு ஏற்படும் என்று எளிதாக, பொறுமையாக எடுத்துச் சொன்ன பிறகும் கேட்காமல், தண்ணீரை கீழே ஊற்ற கடும் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.  

இதனால் கலெக்டர் ரோகிணிக்குக் கோபம் வந்து ’இப்படிப்பட்டவர்களால் கொசு உற்பத்தி அதிகரிக்கிறது. நீங்கள் இதேபோன்று செயல்பட்டு வந்தால் உங்கள்மீது அபராதம் விதிக்க நேரிடும்’ என்று எச்சரிக்கை செய்தால்கூட கேட்பதில்லை. அதேபோல சேலம் மரவனேரி பகுதியில் இன்று மாநகராட்சி செயற்பொறியாளர் அசோகன், உதவி கமிஷனர் சத்தியநாராயணன், சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆய்வுக்குச் சென்றபோது ராஜேஷ் ஸ்டீபன் என்பவரின் வீட்டைப் பார்வையிடச் சென்றபோது வீட்டைப் பூட்டி வைத்துக்கொண்டு திறந்து காட்ட மாட்டேன் என்று வாக்குவாதம் செய்தார்.

பிறகு அவரிடம் அறிவுறுத்தி வீட்டில் பார்த்த போது குடிநீருக்குள் புழுக்களும், கொசுக்களும் இருந்ததை அடுத்து அவருக்கு 5000 அபராதம் விதித்து, குடிநீர் இணைப்பைத் துண்டித்து விட்டார்கள். இதுபோல பொதுமக்கள் ஒத்துழைப்பு குறைவாக இருக்கிறது'' என்கிறார்கள்.